அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் பா.ஜ.க.: யாரைச் சொல்கிறார் கே.எஸ்.அழகிரி? 

அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்று ராகுலை விமர்சித்த பாஜக முக்கிய தலைவர் ஒருவர் பற்றி கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் பா.ஜ.க.: யாரைச் சொல்கிறார் கே.எஸ்.அழகிரி? 

சென்னை:  அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்று ராகுலை விமர்சித்த பாஜக முக்கிய தலைவர் ஒருவர் பற்றி கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசியலில் ஆதாரமற்ற அவதூறுகள், இழிவுபடுத்தும் குற்றச்சாட்டுக்கள், அச்சுறுத்தும் வகையில் விமர்சனங்கள் செய்வது பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு கைவந்த கலையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனால் தான் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பல்லக்கு தூக்கினாலும் அவரை கண்டு கொள்ள எவரும் தயாராக இல்லை. அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ துணிவற்ற நிலையில் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் பா.ஜ.க. தலைமைக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க. தலைமை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் அரசியலில் சுப்பிரமணியன் சுவாமி தொல்லை தருகிற இழிவான மனிதராகவே கருதப்படுவதால் எல்லோரும் அவரை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் குறித்து கருத்து கூறும்போது, தேவையில்லாமல் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். இத்தகைய அவதூறான கருத்தை கூறியதற்காக சுப்பிரமணியன் சுவாமி மீது நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றன. 

இந்திய அரசியலில் நீண்டகாலமாக சுப்பிரமணியன் சுவாமியினுடைய யோக்கியதையையும், அருகதையையும், அனைவரும் அறிவார்கள். யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற சுப்பிரமணியன் சுவாமிக்கு பாடம் கற்பிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

எனவே, அப்பழுக்கற்ற பதவி மறுப்பாளரான எங்கள் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மீது இத்தகைய இழிவான விமர்சனங்கள் செய்தை சுப்பிரமணியன் சுவாமி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி அவர் நிறுத்திக் கொள்ளவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இனியும் இத்தகைய இழிவான பிரச்சாரத்தை மேற்கொள்வாரேயானால் ஜெயலலிதா பாணியில் எதிர்ப்பு போராட்டம் நடத்தாமல், ஜனநாயக ரீதியில் சுப்பிரமணியன் சுவாமியை கடுமையாக விமர்சிக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com