எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்: பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியையே விரும்பி தேர்ந்தெடுத்தனர்.
 இதையடுத்து கலந்தாய்வு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் அக்கல்லூரியில் இருந்த இதர வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பின.
அதற்கு அடுத்தபடியாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் வேகமாக நிரம்பின. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.
அந்த இடங்களுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31,353 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,651 பேருக்கும் தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 48 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் மீதமிருந்த இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவில் சேர்க்கப்பட்டன.
இந்தச் சூழலில், பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில் பங்கேற்குமாறு 1013 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். 
நீட் தேர்வில் 685 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த திருவள்ளூரைச் சேர்ந்த மாணவி கே.ஸ்ருதி கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அவருக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் மாநில கலந்தாய்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.
அதேபோன்று தரவரிசைப் பட்டியலில் முதல் நிலை இடங்களில் இருந்த மற்ற இரு மாணவர்களுக்கு எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதனால், அவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், நீட் தேர்வில் 677 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த  ஏ.கே.அஸ்வின் ராஜ் முதல் மாணவராக கலந்தாய்வில் இடத்தைத் தேர்வு செய்தார். அதற்கு அடுத்தபடியாக சென்னை ஐயப்பன்தாங்கல் மாணவர் ஏ.ஸ்ரீகாந்த், கோவை மாணவி ஏ.தன்யா, பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு குடியேறிய மாணவி ஷாலினி ஜெயராமன் உள்ளிட்டோர் இடங்களைத் தெரிவு செய்தனர். அவர்கள் அனைவருமே சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 13-ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. புதன்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1487 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவி
நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று மாநில தரவரிசைப் பட்டியலில் 118-ஆவது இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி ஜீவிதா சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தார்.
அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், கடந்த இரு ஆண்டுகளாக மருத்துவப் படிப்புகளில் சேர தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். தையல் தொழிலாளியின் மகளான அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராவார். கலந்தாய்வில் அவர் பங்கேற்ற நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலுமே இடங்கள் இருந்தன. அவற்றில் சென்னை மருத்துவக் கல்லூரியை அவர் தேர்வு செய்தார்.
மருத்துவரான பிறகு, தன்னைப் போன்று, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவப் போவதாக ஜீவிதா கூறினார். பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,  ஜீவிதாவின் மருத்துவக் கல்விக்கான செலவை ஏற்பதாகக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com