மதுரையில் அழுகிய முட்டைகள் விற்பனை அதிகரிப்பு: உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் சோதனை

மதுரையில் அழுகிய முட்டைகள் விற்பனை அதிகரித்துள்ளதால் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மதுரையில் அழுகிய முட்டைகள் விற்பனை அதிகரிப்பு: உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் சோதனை

மதுரையில் அழுகிய முட்டைகள் விற்பனை அதிகரித்துள்ளதால் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். 
நாமக்கலில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.  இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான முட்டைகள் உடைந்து சேதமடைகிறது. இந்த முட்டைகளை உற்பத்தியாளர்கள் தினசரி அகற்றுவது கடினம் என்பதால் இலவசமாக கொடுக்கின்றனர். இந்த உடைந்த முட்டைகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், நாமக்கல்லிருந்து வாங்கி வந்து தங்கள் மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய பேக்கரிகள், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றுக்கு ரூ.1-க்கு விற்பனை செய்கின்றனர். 
இந்த, உடைந்த முட்டைகளை நாமக்கலில் ஏற்றி குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விற்பனை செய்ய 3 முதல் 4 தினங்கள் ஆகிவிடும். அதற்குள் உடைந்த முட்டைகள் அழுகி விடுகின்றன. இந்த முட்டைகளில் தயார் செய்யப்படும் உணவு பொருள்களை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவால் உயிரிழப்பு கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், அழுகிய முட்டைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர், தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் கூறியது: மதுரை மாநகரில் அண்மை காலமாக பேக்கரிகள், ஹோட்டல்களில் அழுகிய முட்டைகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்புத் துறை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி சோதனைகள் நடத்தி அழுகிய முட்டைகள் வைத்திருந்த குடோன்களை "சீல்' வைத்துள்ளோம். உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நடைபெற்ற சோதனையில், தத்தனேரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான அழுகிய முட்டைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அந்த குடோனுக்கு "சீல்' வைக்கப்பட்டது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். உணவு பொருள்கள் தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
இதுகுறித்து மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பாக்கியலட்சுமி கூறியது:  மதுரையில் அழுகிய முட்டை பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. இதை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. தவறு செய்பவர்கள் மீது குறைந்தப்பட்ச நடவடிக்கையே எடுக்கின்றனர். அதனால் வியாபாரிகள் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்கின்றனர். அழுகிய முட்டையால் செய்யப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்பவர்கள், கடுமையான பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இது விஷம் வைத்து கொலை செய்வதற்கு சமமான ஒன்று. எனவே, இதுபோன்ற தவறு செய்பவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் வாசுகி கூறியது: அதிகாரிகள் சோதனை செய்ய ஒரு கடைக்கு சென்றதுமே மற்ற கடைகளுக்கு தகவல் தெரிந்துவிடுகிறது. அதிகாரிகள் மற்ற இடங்களுக்கு வருவதற்குள் அனைத்து தவறுகளையும் சரி செய்து விடுகின்றனர். அதிகாரிகள் குடோன்களுக்கு "சீல்' வைத்தால் அடுத்து ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரத்தில் மீண்டும் "சீல்' வைக்கப்பட்ட குடோன் செயல்படத் தொடங்கி விடுகிறது. இதை கேட்டால் எல்லாம் விதிமுறைப்படி தான் நடக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் மீது பெருத்த சந்தேகம் எழுகிறது. எனவே, அழுகிய முட்டை விவகாரத்தில், அனைத்து ஹோட்டல் மற்றும் பேக்கரி சமையல் கூடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றங்களை தடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com