சுடச்சுட

    
    tnsec

    தொலைநோக்குத் திட்டம் 2023 நிறைவேறுமா, நிறைவேறாதா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
    சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, தொலைநோக்கு திட்டம் 2023 என்று அறிவித்தீர்கள். அது என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பினார். 
    மேலும், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான திட்டங்களையே நிறைவேற்றி முடிக்காதபோது, இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினீர்கள். இப்போது மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தப் போவதாகவும் கூறுகிறீர்கள்? என்றார்.
    அப்போது தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குறுக்கிட்டு கூறியது: தொலைநோக்குத் திட்டம் 2023-க்கு இன்னும் 4 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. 
    அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதுதான் இந்தத் திட்டம். தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நிச்சயம் நிறைவேறும் என்றார்.
    எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் புதன்கிழமை பேரவையில் அழகாக ஒன்றைக் கூறினார். வரும், ஆனால் வராது என்று கூறியிருந்தார். இந்தத் தொலைநோக்கு திட்டம் 2023-ஆம் ஆண்டுக்குள் வரும். ஆனால் வராது.
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் சொல்வதைச் செய்வோம், சொல்லாததையும் செய்து கொண்டு இருக்கிறோம். 2-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எல்லாம் நிறைவேற்றிய பிறகுதான் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்றால் அது நடக்காது. 2 ஆண்டுக்கு ஒருமுறை, 3 ஆண்டுக்கு ஒருமுறை, தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்.  இந்தியாவைப் பொருத்தவரைக்கும், தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலம் தமிழகம் என்று தொழிலதிபர்கள் எல்லாம் முடிவு எடுத்துதான் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடு செய்ய முன்வந்து  ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஒரு வாரத்துக்கு முன்னர் கூட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நான் அடிக்கல் நாட்டினேன். தொழில் முதலீட்டை அதிகமாக தமிழகத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதன் அடிப்படையிலேதான், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம்.
    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:  தொலைநோக்குத் திட்டம் 2023-இன் ஆவணம் ரூ.15 லட்சம்  கோடி அளவிலான அரசு மற்றும் தனியார், கூட்டுப் பொறுப்பில் முதலீடுகள் பெற்று உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது. 
    மாநில அரசால் செயல்படுத்தப்பட உள்ள தொலைநோக்குத் திட்டங்களில், 121 திட்டங்களின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. 16 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
    6 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதுடன், எஞ்சியுள்ள திட்டங்கள்  பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன என்று கூறி, அதுதொடர்பான பட்டியலையும் ஓ.பன்னீர்செல்வம் விரிவாகப் படித்தார்.
    அதைத் தொடர்ந்து, தொழில் துறையில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குற்றம் சாட்டிப் பேசினார். அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட உள்ளது. தென் வடமாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுவது மக்களிடம் பீதியைக் கிளப்புவதுபோல உள்ளது என்றார்.
    ராமச்சந்திரன்: உங்களுடைய (ஆர்.பி.உதயகுமார்) திருமங்கலம் தொகுதியில் சிப்காட் வருகிறது என்றார்கள். வந்ததா?
    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்: விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர்கள் நலனுக்காக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதே சமயம், துணை நகரம் அங்கு கொண்டு வரப்படுகிறது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai