Enable Javscript for better performance
பட்ஜெட் தாக்கலுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை: புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  பட்ஜெட் தாக்கலுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை: புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 12th July 2019 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  narayanasamy2


  பட்ஜெட் தாக்கல் செய்ய முட்டுக்கட்டை போடும்விதமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
  காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பிரதாப சிம்மேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக வியாழக்கிழமை வந்த முதல்வர், செய்தியாளர்களிடம் கூறியது :
  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு, வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி தர இருந்தபோது புதுச்சேரி சட்டப் பேரவையில் நானும், வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனும் கடுமையாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மேற்கண்ட நிறுவனத்துக்கு அனுமதி தந்திருப்பதாக எனக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. 
  இந்தப் பகுதிகளில் துரப்பணப் பணி செய்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடிதம் வந்த 2 நாள்களில், இந்த திட்டத்துக்கு புதுச்சேரி மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் நாங்கள் அனுமதி தர மாட்டோம். மாநில அரசின் அனுமதியின்றி  திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
  இந்தத் திட்டத்தால் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவர். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் ஜூலை 12, 13  தேதிகளில் பிரசாரம் நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் 16-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடைபெறுகிறது. காரைக்காலில் பின்னொரு நாளில் இந்த வகை போராட்டம் நடத்தப்படும்.
  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அடுத்த வாரம் புதுதில்லியில் சந்திக்கவுள்ளேன். அப்போது மாநில அரசின் கடும் எதிர்ப்பை அவரிடம் பதிவு செய்வேன். நாட்டில் திட்டக்குழு என்ற அமைப்பு வேறு பெயரில் மாற்றப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் இது கலைக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் இருந்துவருகிறது. 
  இந்த குழுவை கூட்ட  துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுத்தார். இந்த குழுவானது கூட்டத்தில் கருத்துகளைப் பதிவு செய்யலாம், மாநில அரசுக்கு ஆலோசனை தரலாம். 
  இந்க கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டுமென துணை நிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பியிருந்தேன். ஆனால், அதை பொருள்படுத்தாமல் துணை நிலை ஆளுநர் கூட்டத்தை நடத்தினார்.
  நாடாளுமன்ற  மாநிலங்களவை அதிமுக  உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினார். நானும், அமைச்சர்களும் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினோம். கூட்டத்தை துணை நிலை ஆளுநர் 13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 
  எதிர்க்கட்சித் தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, அவர்களை நிரந்தர உறுப்பினர்களாக நியமிக்க வேண்டுமென அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின் அரசுக்கு உத்தரவிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.  
  நிரந்தர உறுப்பினர்களாக அவர்களை நியமிக்க அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆளுநர் வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். தன்னிச்சையாக எந்த கருத்தையும் திணிக்க முடியாது. 
  திட்டக்குழு கூட்டத்தின் விவாதங்கள் இறுதியானது, உறுதியானது அல்ல. பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு முனைந்திருக்கும்போது, அதற்கு குந்தகம் விளைவிக்க வேண்டும், முட்டுக்கட்டை போடவேண்டுமென்ற நோக்கில் துணை நிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தை துணை நிலை ஆளுநர் அணுகியுள்ளார். இதற்கு தடை கொடுக்கப்படவில்லை. இலவச அரிசி வழங்கல், ஆதிதிராவிடர் பிரிவில் பழங்குடியினரை சேர்த்தல், நிலம் மாற்றம் தொடர்பானவை உச்சநீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நானும் அரசின் கருத்தை பதிவு செய்திருக்கிறேன். 
  நீதி வெல்வதற்கு தொடர்ந்து போராடுவோம்.  நீதிமன்றத்தின் மூலமும், நிர்வாகத்தின் மூலமும் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளோம் என்றார் முதல்வர். பேட்டியின்போது வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உடனிருந்தார்.

  எதிர்ப்பைக் கண்டு அஞ்ச வேண்டாம்: பிரதமரின் அறிவுறுத்தலால் கிரண் பேடி உற்சாகம்
  எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் மக்கள் பணியில் கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
  இதுகுறித்து வியாழக்கிழமை தனது கட்செவி அஞ்சலில் அவர் வெளியிட்ட பதிவு: கடந்த மூன்று ஆண்டுகளாக புதுவை ஆளுநர் மாளிகையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம்  விளக்கினேன். ஆளுநர் மாளிகையின் முழுமையான செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் தெரிவித்தேன்.
  மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். இதற்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கட்செவி அஞ்சல், மின்னஞ்சல், கட்டுப்பாட்டு அறை எண்கள், ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைதீர் கூட்டம், பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்குவது, வார இறுதி நாள்களில் கள ஆய்வுப் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கினேன். இவ்வாறான பணிகளை அமைச்சர்களும், அரசுத் துறைத் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருவதையும் பிரதமரிடம் விளக்கினேன்.
  இது நிர்வாகத்தின் சிறந்த நலனுக்காகவும் இருக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தானாக முன்வந்து இது செய்யப்பட வேண்டும். 
  இந்த நம்பகத் தன்மை வாய்ந்த பதிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக உள்ளது. இதன் மூலம் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை, அணுகுமுறைகளைத் திருத்திக் கொள்ள அரசுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இதன் மூலம் கால தாமதமும் தடுக்கப்படுகிறது.
  அரசின் நிர்வாகம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதாகும். 
  எனவே, அதுகுறித்த தகவல்களை மக்களுடன் பகிர்வதால், அவர்களிடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பும் அரசுக்குக் கிடைக்கும். இந்த விவகாரத்தில் எதிர்தரப்பினரின் எதிர்ப்பு, விமர்சனம் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கும் இதில் பங்குண்டு. விமர்சனம் ஆக்கப்பூர்வமான இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடாது. என்னுடைய 
  விளக்கங்களைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கான பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என ஊக்கப்படுத்தியது எனக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கிரண் பேடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai