சுடச்சுட

  

  ரயில்வே துறை தனியார்மயத்தை தமிழக மக்கள் எதிர்ப்பார்கள்: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

  By DIN  |   Published on : 12th July 2019 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanimozhi


  ரயில்வே துறை, சேலம் உருக்காலை, சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) போன்றவற்றை தனியார்மயமாக்குவதை தமிழக மக்கள் எதிர்ப்பார்கள்; திமுகவும் எதிர்க்கும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி பேசினார்.
  மக்களவையில் வியாழக்கிழமை 2019-2020-ஆம் ஆண்டுக்கான ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: 
  இந்திய ரயில்வே உலக அளவில் நான்காவது மிகப்பெரிய ரயில்வே ஒருங்கிணைப்பாகத் திகழ்கிறது. தினமும் 23 மில்லியன் பயணிகள் பயணிக்கிறார்கள். 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் துறையாகவும் உள்ளது. 2019-20-இல் ரயில்வே வருவாய் 10 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவீனத்தை 9 சதவீதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களுக்கு ரூ. 7,255 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசைப் பொருத்தமட்டில் எல்லாவற்றுக்கும் தீர்வாக தனியார்மயம் என்பதாகும்.
  ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு பொது - தனியார் பங்களிப்பு (பிபிபி) மாடல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக கடந்த பட்ஜெட்டில் பிபிபி மூலம் ரூ.6 லட்சம் கோடி முதலீடு உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசியாக தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடு ஏதும் வரவில்லை. கடைசியில் பொதுத் துறை நிறுவனமான எல்ஐசியை அணுகி ரூ.1.20 லட்சம் கோடி கடனாகக் கோரப்பட்டது. ஆனால், எல்ஐசி கொடுத்த கடனில் ரூ.30 ஆயிரம் கோடிதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  ரயில்வே திட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் உள்ளன. அரசு ஒவ்வொரு திட்டத்தின் பெயரையும் ஹிந்தியில் மட்டுமே வைக்கிறது. கிராம மக்கள் சொல்லப் போனால் எனது தூத்துக்குடி மாவட்ட மக்கள் எப்படி இதைப் புரிந்துகொள்வார்கள்? தூத்துக்குடியில் பெயர்ப் பலகையைப் பார்த்த போது பிரதான் மந்திரி சடக் யோஜனா என எழுதப்பட்டிருந்தது. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கான மொழி பெயர்ப்பு ஆங்கிலத்திலோ, பிராந்திய மொழியிலோ இல்லை. ஆகவே, மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் மொழியில் ரயில்வே திட்டங்களின் பெயர்கள், ரயில்வே விவரங்கள், பெயர்ப் பலகைகள் ஆகியவை பிராந்திய மொழியில் இடம் பெறுவதை ரயில்வே துறை உறுதிப்படுத்த வேண்டும்.
  சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், வளர்ச்சி ஏதும் இல்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்திற்குள் வரக்கூடிய திருவனந்தபுரத்தின் சில பகுதிகள் அடங்கிய புதிய ரயில்வே கோட்டம் திருநெல்வேலியில் உருவாக்கப்பட வேண்டும். ஈரோடு ரயில்வே நிலையத்தை தந்தைப் பெரியார் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை - தூத்துக்குடி இடையே தற்போது ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. புதிதாக மேலும் ஒரு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும்.
  ரயில்வே துறையில் கழிவுகளை மனிதர்கள் அள்ளும் முறை நேரடியாக இல்லை என்று ரயில்வே கூறுகிறது. ஆனால், அப்பணி ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தேச அவமானமாகும். அவர்களைப் பாதுகாக்க உரிமைகள் இல்லை. பாதுகாப்பு சாதனங்களும் அளிக்கப்படுவதில்லை. மேலும், இந்திய ரயில்வேயையும், சேலம் உருக்காலை அல்லது ஐசிஎஃப் ஆலையை தனியார்மயமாக்கவோ, கார்ப்பரேட்மயமாக்கவோ எந்த முயற்சி எடுத்தாலும் அதை தமிழக மக்கள் எதிர்ப்பர்.  திமுகவும் எதிர்க்கும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai