திராவிட இயக்கத்தின் தனித்த அடையாளம் நெடுஞ்செழியன்

திராவிட இயக்கத்தின் தனித்த அடையாளம் நாவலர் நெடுஞ்செழியன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
திராவிட இயக்கத்தின் தனித்த அடையாளம் நெடுஞ்செழியன்


திராவிட இயக்கத்தின் தனித்த அடையாளம் நாவலர் நெடுஞ்செழியன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திராவிட இயக்கத்தின் சமூக நீதி லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பெரியாரின் பகுத்தறிவுத் தெளிவுடனும் அண்ணாவின் தமிழ்மொழிப் பற்றுடனும் கருணாநிதியுடனான இயக்க உறவுடனும் தொடர்ந்து பயணித்தவரான நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா என்பது தேனென இனிக்கும் செய்தியாகும். 
திராவிடர் கழகத்திலிருந்து உருவான திமுகவின் தொடக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும்  அண்ணாவுக்கு உற்ற துணையாகவும் உறுதியான நம்பிக்கையாகவும் விளங்கியவர். திராவிட இயக்கப் பேச்சுக்கலையில் நாவலர் பாணி என்று அடையாளப்படுத்தும் வகையில்  அவருடைய சொற்பெருக்கு அமைந்திருந்தது. 
மும்முனைப் போராட்டம், விலைவாசி உயர்வுப் போராட்டம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என போராட்டக் களங்களில் அண்ணாவுக்குத் துணையாக நின்றவர். 1967-இல் திமுக முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது, அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாம் இடம் பெற்றவர். அரசியல் சூழல்களால் தனிக்கட்சி தொடங்கி, பின்னர் வேறு முகாமில் இணைந்தபோதும் திராவிட இயக்கத்தின் தீரம்மிக்க அடையாளமாகவே விளங்கினார். சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி லட்சியத்தை இறுதி வரை கடைப்பிடித்தார்.
கேரள மாநிலம் வைக்கம் நகரில் பெரியார் நடத்திய போராட்டத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் நிதியமைச்சராகப் பங்கேற்ற நெடுஞ்செழியன் பேசிய உரையில், பகுத்தறிவும் திராவிட இயக்க உணர்வும் மிளிர்ந்தன. திருக்குறளுக்கு அவர் எழுதிய விரிவான உரை, திராவிட இயக்கப் பார்வையில் அமைந்ததாகும். மில்லின்னியம் எனப்படுகிற புத்தாயிரம் ஆண்டையொட்டி சென்னை பெரியார் திடலில் அவர் ஆற்றிய இறுதிப் பேருரை, நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் சாதனைகள் இனி வரும் காலத்தில் எத்தகைய வளர்ச்சிக்குத் துணை நிற்கும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.
திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும் தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டுள்ள நெடுஞ்செழியனின் நூற்றாண்டில் அவரது பெருமைகளை நினைவு கூர்வோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com