திருவையாறு தியாகராஜர் சந்நிதியில் துபை வாழ் இந்திய மாணவர்கள் இசை அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சந்நிதியில் துபை வாழ் இந்திய மாணவர்கள் வியாழக்கிழமை இசை அஞ்சலி செலுத்தி
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் சந்நிதியில் வியாழக்கிழமை இசை அஞ்சலி செலுத்திய துபை மாணவர்கள்.
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் சந்நிதியில் வியாழக்கிழமை இசை அஞ்சலி செலுத்திய துபை மாணவர்கள்.


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சந்நிதியில் துபை வாழ் இந்திய மாணவர்கள் வியாழக்கிழமை இசை அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
துபை நாட்டைச் சேர்ந்த கலை, நடன ஆசிரியை விம்மி ஈஸ்வர் (40) தலைமையில் கர்நாடக இசை, பரதநாட்டியம், குச்சுப்புடி பயின்ற 28 மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஜூலை 9-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, திருவையாறில் உள்ள கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சந்நிதியில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி,  ஸ்ரீ தியாகராஜருக்கு வியாழக்கிழமை இசை அஞ்சலி செலுத்தினர். 
இதில், கர்நாடக இசை பயின்ற 10 மாணவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து விம்மி ஈஸ்வர் தெரிவித்தது:
கலைகளின் பிறப்பிடம் இந்தியாதான். இதேபோல நமக்கு பாரம்பரியமான கலாசாரமும் உள்ளது. நாம் கற்கும் கலைகள் எங்கு பிறந்தது என்பதை அங்குள்ள மாணவர்களை நேரில் அழைத்து வந்து பார்வையிட வேண்டும் என முடிவு செய்தோம். இதன்படி,  கடந்த ஆண்டு இந்தோனேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள 
கோயில்கள், இந்துகளின் பாரம்பரியம், கலைகள் குறித்து பார்வையிட்டோம். பின்னர், கேரளத்துக்கு அழைத்து சென்று, அங்கு கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களைப் பார்வையிட்டு, அது தொடர்பாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தோம். தற்போது, திருவையாறு தியாகராஜர் சந்நிதியில் கர்நாடக இசையைப் பாடினோம். 
இதையடுத்து, தஞ்சாவூர் பெரியகோயிலில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை பரதநாட்டியம், குச்சுப்புடி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதில், தேவாரப் பாடலை குச்சுப்புடி நடனத்தில் முதல்முறையாக தஞ்சாவூர் நட்டுவாங்க இசைக்கலைஞர் ஹேரம்பநாதனுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
பின்னர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக பாரம்பரிய இசைகள், கலைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளோம். 
ஜூலை 15-ஆம் தேதி சிதம்பரத்தில் பரதநாட்டியமும், 18-ஆம் தேதி சென்னை ஆர்.ஆர். சபாவில் இசை நிகழ்ச்சியும், 20-ஆம் தேதி விஜயவாடாவில் இசை நிகழ்ச்சியும், 21-ஆம் தேதி அங்குள்ள குச்சுப்புடி கிராமத்துக்கு சென்று குச்சுப்புடி நடனத்தை அரங்கேற்றம் செய்ய உள்ளோம் என்றார் விம்மி ஈஸ்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com