நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வி தகுதி:  பணி வழங்க உரிமை கோர முடியாது

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் காரணம் காட்டி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித் தகுதி உடைய ஒருவர் தனக்கு பணி வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது
நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வி தகுதி:  பணி வழங்க உரிமை கோர முடியாது


வேலையில்லாத் திண்டாட்டத்தைக் காரணம் காட்டி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித் தகுதி உடைய ஒருவர் தனக்கு பணி வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மின்சார ரயில் ஓட்டுநர், நிலையக் கட்டுப்பாட்டாளர், நிலைய இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு பட்டயப் படிப்பு 
படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பி.இ. அல்லது பி.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. ஒருவேளை பணி வழங்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்டவர் கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர் எனத் தெரியவந்தால் பணி இழக்க நேரிடும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் பொறியியலில் பட்டயப் படிப்பு படித்து பின்னர் பி.இ. படித்து முடித்த ஆர்.லட்சுமி பிரபா என்பவர் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அவர் பி.இ. முடித்தவர் எனத் தெரியவந்ததால், அவருக்கு பணி வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்து விட்டது. இதனை எதிர்த்து லட்சுமி பிரபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரர் பி.இ. படித்ததை மறைக்கவில்லை. மேலும், இந்த பணிக்கானத் தேர்வு எழுதிய போது மனுதாரர் கூடுதல் கல்வித்தகுதியைப் பெற்றிருக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மனுதாரரின் உரிமையைப் பாதிக்கும் எனக்கூறி வாதிடப்பட்டது. 
அப்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில், அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்து தெளிவாக அறிவித்திருந்தும், பி.இ. முடித்துள்ள மனுதாரர் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றுள்ளார். எனவே தான் மனுதாரருக்கு பணி வழங்கவில்லை எனக் கூறி வாதிடப்பட்டது. 
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படித்த படிப்புகளுக்கு வேலையில்லை. இதற்காக கடைநிலை உதவியாளர், அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட பணிகளுக்கு முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்து பணிகளை பெற்று விடுகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தவரை மெட்ரோ ரயில் நிர்வாகம், அறிவிப்பாணையில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மனுதாரர் தனது கூடுதல் கல்வித் தகுதியை மறைக்கவில்லை என்றாலும், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அவர் பி.இ. பட்டதாரி என்பதை மறுக்க முடியாது. மனுதாரரின் கூடுதல் கல்வித் தகுதியின் காரணமாகவே மெட்ரோ ரயில் நிர்வாகம் அவருக்கு பணி வழங்க மறுத்துள்ளது. 
எனவே, வேலையில்லாத் திண்டாட்டத்தைக் காரணம் காட்டி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித் தகுதி உடைய ஒருவர் தனக்கு பணி வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது எனக்கூறி லட்சுமிபிரபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com