நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படும்: சென்னை ஆறுகளை தூய்மைப்படுத்த ரூ.2,371 கோடி

நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படும் என்றும், சென்னையில் உள்ள இரண்டு ஆறுகளும்,
நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படும்: சென்னை ஆறுகளை தூய்மைப்படுத்த ரூ.2,371 கோடி


நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படும் என்றும், சென்னையில் உள்ள இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் ஐந்து ஆண்டுகளில் ரூ.2,371 கோடி செலவில் தூய்மைப்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை: சென்னையில் உள்ள அடையாறு, கூவம் நதிகளுக்கான சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டங்கள் இப்போது நடைபெற்று வருகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதனைச் சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்றுவழிகளை அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டுக்குள்  ரூ.2,371 கோடி செலவில்  செயல்படுத்தப்படும். 
ஒருங்கிணைந்த கொள்கை: தமிழகத்தில் குடிநீர்த் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், பருவமழை பொய்த்து நீர்வளம் குறைந்துள்ளது. இதனை எதிர்கொள்ள நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அரசு உருவாக்கும்.
நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும், நீர் தரும் ஆதாரங்களை அதிகரிக்கவும் நிரந்தர, நிலையான தீர்வுகளைக் கண்டறிவது அவசியம். அதன்படி, 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் தூய்மைப்படுத்தி மறுபயன்பாட்டுக்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கோவை வெள்ளலூரில் நிகழாண்டிலேயே புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.
பராமரிப்புத் தொகை: மாநிலத்தில் உள்ள 800 மாற்றுத் திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகையுடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும். 
100 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் ஆவின் பால் மையம் அமைப்பதற்குச் செலுத்த வேண்டிய ரூ.25 ஆயிரத்தை அரசே செலுத்தும் திட்டத்துடன் அவர்கள் பொருள்களை கொள்முதல் செய்ய ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரமாக, பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com