சுடச்சுட

    

    திமுகவின் வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

    By DIN  |   Published on : 13th July 2019 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayakumar3


    தேர்தல் வெற்றி குறித்து சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
    அதில், திமுகவின் வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
    சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கைத்தறித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.சுந்தர் பேசியது: மக்களவைத் தேர்தலில் அதிமுக 1.25 கோடி வாக்குகள் மட்டுமே பெற்றது. திமுக 2 கோடி வாக்குகள் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற அதிமுகவின் சாதனையை திமுக தட்டிப் பறித்துள்ளது என்றார்.
    அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகையே இழந்தது. வைப்புத் தொகையையே இழந்த கட்சி மீண்டும் வெற்றிபெறும்போது, நாங்கள் வெற்றி பெற மாட்டோமா? உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளைக் கொடுத்துதான் திமுக வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் அதிமுக உண்மையான வெற்றி பெறும் என்றார்.
    க.சுந்தர்: உங்களால், ஆர்.கே.நகரில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வெற்றி பெற்றார். இப்போது அவர் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், மகிழ்ச்சியாக உள்ளீர்கள். ஆனால், நாங்கள் ஆர்.கே.நகரில் வைப்புத் தொகையை இழந்தாலும், இப்போது  2 கோடி வாக்குகள் பெற்றுள்ளோம்.
    அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: மானிய கோரிக்கையில் திமுக உறுப்பினர் அரசியல் பேசுகிறார். 1980-இல் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. 
    திமுக கொறடா அர.சக்கரபாணி: 2004 மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, 2006-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதேபோல், இப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 இடங்களைப் பிடித்துள்ளோம். 2021-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம்.
    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை பற்றி திமுக உறுப்பினர் பேசுகிறார். திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால், அதே தொகுதியில் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ளது. அதேபோல, 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ளது.
    அமைச்சர் டி.ஜெயக்குமார்: தமிழகத்தில் அதிகமாக தோல்வி அடைந்த கட்சி என்றால் அது திமுகதான். தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி என்றால் அது அதிமுகதான். மக்களவைத் தேர்தலில் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றீர்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது. இந்தியா முழுவதற்கும் போடப்படும் நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த நிதியை ஒதுக்கினாலும், திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது தற்காலிகப் பின்னடைவுதான். ஆனால், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றும் முழுமையான மகிழ்ச்சியைப் பெற முடியாமல் திமுக இருக்கிறது. அறுவைச் சிகிச்சை வெற்றி. நோயாளி இறந்தார்' என்பது போல உங்களுக்குத் தேர்தல் முடிவு கிடைத்துள்ளது. 1977-இலிருந்து 1987-ஆம் ஆண்டு வரை கோட்டை பக்கமே (ஆட்சியில்) திமுகவை மக்கள் விடவில்லை. அதேபோல, 2011-க்கு பிறகும் கோட்டையில் (ஆட்சியில்) திமுகவுக்கு இடமே கிடைக்கப் போவதில்லை.
    க.சுந்தர்: போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி. 1996 தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.
    கே.ஏ.செங்கோட்டையன்: எம்ஜிஆரின் பாவமன்னிப்பு சிலருக்குத் தெரியும். 234 தொகுதிகளிலும் இரட்டைஇலையைப் போட்டியிட வைத்து சாதனை புரிந்தவர் ஜெயலலிதா.
    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai