
தமிழகத்தில் தத்கல் முறையில் வழங்கப்பட்டது உள்பட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு நிகழாண்டில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வேளாண் துறை மானிய கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் பிரகாஷ் பேசினார். அப்போது நடந்த விவாதம்:
பிரகாஷ் (திமுக): தமிழகத்தில் தத்கல் முறையிலான மின் இணைப்பைப் பெற செலுத்த வேண்டிய தொகையை வட்டிக்குப் பெற்று விவசாயிகள் செலுத்துகின்றனர். எனவே, தத்கல் திட்டத்தை ரத்து செய்து, சாதாரண முறையில் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்புகளை அளிக்க வேண்டும்.
அமைச்சர் பி.தங்கமணி: விவசாயிகள் அனைவருக்கும் தத்கல் முறையில் மின் இணைப்பு என அறிவிக்கவில்லை. அந்த முறையை விரும்பி விண்ணப்பிக்கக் கூடிய விவசாயிகளுக்கு மட்டுமே தத்கல் முறையில் மின் இணைப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் அளிக்க வேண்டிய 10 ஆயிரம் மின் இணைப்புகள், நிகழாண்டில் 10 ஆயிரம் இணைப்புகள், சாதாரண முறையில் மின் இணைப்புகள் என மொத்தம் 40 ஆயிரம் மின் இணைப்புகள் இந்த ஆண்டில் அளிக்கப்படும். எனவே, தத்கல் முறையை எந்த விவசாயி மீதும் கட்டாயப்படுத்தவில்லை.
பிரகாஷ்: பயிர்க் காப்பீடு செயல்படுத்தப்பட்டாலும் அதற்கான உரிய நிவாரணத் தொகை நமக்குக் கிடைக்கவில்லை.
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு: பயிர்க் காப்பீடு இழப்பீடாக ஒவ்வொரு நிதியாண்டின் போதும் நாம் தொகையைப் பெற்று வருகிறோம். கடந்த 2016-17-ஆம் ஆண்டில் ரூ.3,516 கோடியும், கடந்த 2017-18-ஆம் ஆண்டில் ரூ.1,819 கோடியும், 2018-19-ஆம் ஆண்டில் அதே அளவுக்கான தொகையை இழப்பீடுத் தொகையாகப் பெற்றுள்ளோம்.
பிரகாஷ்: எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மொழி பேசும் மாணவர்கள் தங்களது மொழியிலேயே பொதுத் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளித்திட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளை அழைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் பேசிட வேண்டும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: சிறுபான்மை மொழி பேசும் மாணவர்களுக்கு அவர்களுக்கான மொழியிலேயே கேள்வித்தாள் தரப்படுகிறது. இத்தகைய மாணவர்கள் தேர்வுக்கு முன்பாகவே எந்த மொழியில் கேள்வித் தாளை விரும்புகிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவித்து பட்டியல் தந்து விட்டால், அவர்களுக்கு கேள்வித்தாள் தரப்படும் என்றார்.