Enable Javscript for better performance
புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை அமல்படுத்தலாம்: உச்சநீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை அமல்படுத்தலாம்: உச்சநீதிமன்றம்

    By DIN  |   Published on : 13th July 2019 04:38 AM  |   அ+அ அ-   |    |  

    supreme court


    புதுச்சேரி அதிகார மோதல் விவகார வழக்கில், அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்த கடந்த ஜூன் 4-இல் விதிக்கப்பட்ட தடையை வெள்ளிக்கிழமை நீக்கிய உச்சநீதிமன்றம், இது தொடர்புடைய வழக்கையும் தள்ளுபடி செய்தது.
    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மத்திய அரசு வழக்குத் தொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
    புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், அரசின் அன்றாட அலுவல்களில் ஈடுபடும் வகையில், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி மறுத்துவிட்டது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க எதிர்மனுதாரரான கே. லட்சுமிநாராயணனுக்கு உத்தரவிடப்பட்டது. 
    இந்நிலையில், புதுச்சேரி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதிதாக மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த விடுமுறைக் கால உச்சநீதிமன்ற அமர்வு, புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் நிதிச் செலவினங்கள், நிலப் பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பான முடிவுகளை அமல்படுத்தக் கூடாது' என உத்தரவிட்டது. மேலும், இந்தத் தடையை நீட்டித்து வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
    இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, புதுச்சேரி அமைச்சரவையில் நிதிச் செலவினங்கள், நிலப் பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பான முடிவுகளை அமல்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும்' என்றார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை மேலும் விசாரிக்க இயலாது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்தது' எனக் கூறி, இது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மக்களுக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் நாராயணசாமி
    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி என  முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
    இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: எம்எல்ஏ  க.லட்சுமிநாராயணன் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆளுநர் கிரண் பேடி சார்பில், மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
    இந்த நிலையில், கடந்த ஜூன் 7 -இல் கூடிய புதுவை அமைச்சரவை இலவச அரிசி வழங்குவது, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குவது, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது, மாநில ஆதிதிராவிடர் நலத் துறையை ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை என மாற்றம் செய்வது ஆகிய முடிவுகளை எடுத்தது.
    ஆனால், ஆளுநருக்கு கால அவகாசம் வழங்காமல் அமைச்சரவை எடுத்த முடிவுகளை ஏற்க முடியாது, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரிசி வழங்குவதை ஏற்க முடியாது என்று கடந்த ஜூன் 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஆளுநர் தரப்பில்  கூறப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தடையை நீட்டித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை வழங்கவில்லை.
    இந்த நிலையில், தலைமை நீதிபதி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைக் கொண்டு வர அதிகாரம் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். இலவச அரிசி வழங்கும் விஷயத்தில் ஆளுநரின் தலையீட்டை ஏற்க முடியாது என்று லட்சுமிநாராயணன் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தது தவறு, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன், மேல்முறையீட்டு மனுவையும் ரத்து செய்தனர். இதன் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. ஆளுநருக்கு அரசின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இது புதுவை மக்களுக்கு கிடைத்த சரித்திர வெற்றி. ஜனநாயகம் வென்றுள்ளது. புதுவை மக்கள் வென்றுள்ளனர்  என்றார் முதல்வர் நாராயணசாமி.

    தீர்ப்பை முழுமையாகப் படிக்காமல் கருத்துக் கூற இயலாது: கிரண் பேடி
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படிக்காமல் கருத்துக் கூற இயலாது என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
    புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் கிரண் பேடி மேல்முறையீடு செய்திருந்தார்.
    இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், புதுவை அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதிகள் நீக்கினர். இந்தத் தீர்ப்பு குறித்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பை நான் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. தீர்ப்பை முழுமையாகப் படித்தால் மட்டுமே அதுகுறித்து கருத்துக் கூற இயலும். புதுவை மக்கள் நலனில் மட்டுமே நான் எப்போதும் கவனம் செலுத்தினேன். அதற்கே முன்னுரிமை அளிப்பேன் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp