
பேரவைத் தலைவருக்கு திமுக - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை, திமுக உறுப்பினர் க.சுந்தர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசுவதாகக் கூறி, உரையை நிறைவு செய்யுமாறு பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறிக் கொண்டிருந்தார். அதற்கு திமுகவினர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டே இருந்தனர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், திமுக கொறடாவும் பங்கேற்றனர். அதில், ஒவ்வொரு உறுப்பினரும் 20 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிப்பது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், மானிய கோரிக்கையைப் பற்றிப் பேசாமல், வேறு விஷயங்களைப் பற்றிப் பேசும்போதுதான் நேரமாகிறது. அதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளும்கட்சி உறுப்பினர்களும் மானிய கோரிக்கையைப் பற்றி பேசுங்கள். பேரவைத் தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார் முதல்வர்.