எல்லா ஊர்களிலும் விளையாட்டு மைதானங்கள்: அரசு தகவல்

எல்லா ஊர்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூறினர்.
எல்லா ஊர்களிலும் விளையாட்டு மைதானங்கள்: அரசு தகவல்


எல்லா ஊர்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூறினர்.
 சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை திமுக கொறடா அர.சக்கரபாணி, மாநில-மாவட்ட அளவில் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொது நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினார்.
அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த விளக்கம்:
அரசுத் துறைகளில் கண்டறியப்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனமும் வழங்க ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 2 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அர.சக்கரபாணி: விளையாட்டு வீரர்களுக்கு எல்லாத் துறைகளிலும் மத்திய அரசு வேலை வழங்குகிறது. அதேபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு நேரம் வாரத்துக்கு 2 வகுப்புகள் மட்டுமே உள்ளன. தினமும் விளையாட்டு வகுப்புக்கு  இடமளிக்க வேண்டும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: ரூ.65.26 கோடியில் ஊரக விளையாட்டுக் குழு அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு, கிராம மக்கள் நாள்தோறும் மாலை வேளைகளில் விளையாடுவதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.
அர.சக்கரபாணி: நகரங்களில் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. எங்கு சென்றாலும், விளையாடுவதற்கு மைதானங்கள் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கே.ஏ.செங்கோட்டையன்: 5 ஏக்கருக்கு மேல் இடம் உள்ள 267 பள்ளிகளில் பொது மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறையுடன் ஆலோசித்து விளையாட்டு மைதானங்கள் இல்லாத இடங்களில் மைதானங்கள் அமைக்கப்படும்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: திமுக உறுப்பினர் இப்போதுதான் கூறுகிறார். முதல்வர் ஒரு வாரத்துக்கு முன்பே எங்களை அழைத்துப் பேசினார். எல்லா கிராமங்களுக்கும் கிரிக்கெட் உள்ளிட்ட எல்லா விளையாட்டுப் பொருள்களையும் கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com