தொடங்கிய புள்ளிக்கே திரும்பிய வைகோ: 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
தொடங்கிய புள்ளிக்கே திரும்பிய வைகோ: 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர்


மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வைகோ போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானது நாடாளுமன்ற நோக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால், வைகோவுக்கு தலைக்கு மேல் கத்தியாக 2009-இல் அவர் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு இருந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இதனால், அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.  

ஆனால், சிறைத் தண்டனை காலம் ஓராண்டு என்பதால் மாநிலங்களவையில் போட்டியிட எந்தவித சட்ட சிக்கலும் வைகோவுக்கு கிடையாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். எனினும், 'தேசத் துரோக' வழக்கு என்பதால் தார்மீக அடிப்படையில் அவரது வேட்புமனுவை சட்டப்பேரவைச் செயலாளர் நிராகரிக்கப்படலாம் என்கிற வாதமும் ஓரமாக இருந்து வந்தது. 

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகோவுக்கு மாற்றாக திமுக சார்பில் 4-வது வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், வைகோவின் வேட்பு மனுவை சட்டப்பேரவைச் செயலாளர் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு, போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வும் ஆனார். 

இதன்மூலம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ மீண்டும் மாநிலங்களவையில் காலடி எடுத்துவைக்கிறார். 

வைகோவும், தேர்தல் வரலாறும்:

வைகோ இதுவரை மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1978, 1984, 1990 என மூன்று முறையும் திமுக சார்பில் போட்டியிட்டே அவர் மாநிலங்களவைக்கு தேர்வானார். மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் ஆன பிறகு தான் திமுக, வைகோ இடையிலான பிளவு ஏற்பட்டது. இதன்பிறகு வைகோ மதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.

 

மதிமுக கட்சியைத் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் அதாவது, 1996-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. இதில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து 170-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டது மதிமுக. வைகோ விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தல் மதிமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. வைகோவே திமுக வேட்பாளர் கே. ரவிசங்கரிடம் வெறும் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து, அதே 1996-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதே கூட்டணியுடன் களமிறங்கிய வைகோ சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார். இதில், 2,04,339 வாக்குகளைப் பெற்றபோதிலும் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்து மீண்டும் தோல்வியடைந்தார். 

1998-இல் அதிமுக கூட்டணி:

கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த வைகோ, 1998-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அதிமுக மற்றும் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வந்த வைகோ தேர்தல் அரசியல் சூழலை உணர்ந்து இந்த கூட்டணியை அமைத்தார். கடந்த முறை தோல்வியடைந்த அதே சிவகாசி தொகுதியில் மீண்டும் களமிறங்கினார் வைகோ. ஆனால், வைகோ இந்த முறை சுமார் 50 சதவீத வாக்குகளைப் பெற்று அமோகமான வெற்றியைப் பெற்றார். 

1999-இல் திமுக கூட்டணி:

1999-இல் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து இந்தியாவில் மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பதிலாக திமுகவுடன் கூட்டணி வைத்தார் வைகோ. கருணாநிதியிடம் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு திமுக பக்கமே திரும்பமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் வைகோ இந்த கூட்டணியில் இடம்பெற்றார். இந்த தேர்தலிலும் வைகோ சிவகாசி தொகுதியிலேயே போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். 

இதன்பிறகு 2009 தேர்தலில் ஈழப் பிரச்னை உச்சத்தில் இருந்த நிலையில், திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக எதிர்த்து வந்த வைகோ அதிமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினார். இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் வைகோ அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்.   

இதையடுத்து, 2014-இல் நரேந்திர மோடியை ஆதரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த வைகோ மீண்டும் விருதுநகர் தொகுதியிலேயே போட்டியிட்டார். இந்த தேர்தலில் பாஜக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அதிமுகவின் ஆதிக்கமே கோலோச்சியது. இதன் காரணமாக விருதுநகரில் போட்டியிட்ட வைகோ அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 

இப்படி நாடாளுமன்றம் பக்கமே கவனம் செலுத்தி வந்த வைகோ 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2016-இல் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க முடிவு செய்தார். திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார் வைகோ. அதன்பிறகு, தேமுதிகவையும் இந்த கூட்டணியில் இணைத்த அவர், விஜயகாந்தையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தார். இந்த தேர்தலில், தான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். 

20 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குவது அக்கட்சித் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார் வைகோ. தனக்குப் பதிலாக கோவில்பட்டி தொகுதியில் மாற்று வேட்பாளரை நிறுத்தினார். இது கட்சிக்குள் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.          
 
இப்படி சட்டப்பேரவைக்கும், மாநிலங்களவைக்கும் விடுப்பு அளித்த வைகோ, மக்களவைத் தேர்தல்களில் தோல்வி, கள அரசியல், போராட்டங்கள் என தீவிரமாக செயல்பட்டு வந்த வைகோ மாநிலங்களவைக்குத் தேர்வாகி 22 ஆண்டுகள் விரதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தொடங்கி, பல்வேறு சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களைச் சந்தித்த வைகோ தற்போது மீண்டும் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகி தொடங்கிய புள்ளிக்கே திரும்பியுள்ளார்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் தொடங்கி நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் என மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கை தொடங்கி, தபால் துறைக்கான தேர்வை இனிமேல் பிராந்திய மொழிகளில் எழுத முடியாது, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே எழுத முடியும் போன்ற அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. விமரிசனங்கள் இருப்பினும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டவர், மாநிலங்களவையில் மாநில சுயாட்சிக்கான குரலை எழுப்பியவர் என்ற வரலாறுகளை கொண்ட வைகோ இப்படிப்பட்ட ஒரு சூழலில் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளது அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com