சுடச்சுட

  

  தமிழில் நீதிமன்றத் தீர்ப்புகள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  By DIN  |   Published on : 14th July 2019 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramnathgovindh

  சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகளின் நகல்களை தமிழில் வழங்கலாம். உள்ளூர் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளின் நகல்களை உயர்நீதிமன்றங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கலாம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்தார்.
   சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில ஆளுநருமான பி.சதாசிவம், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். ஏ. போப்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.
   இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியது: சட்டம் மற்றும் நீதித்துறையில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக மூன்று நீதிபதிகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகம் மூன்று நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் டாக்டர் பட்டம் வழங்குவது இதுவே முதல் முறை. இந்த 3 நீதிபதிகளும் சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர். இவர்களை வாழ்த்துகிறேன். சட்டத் துறையில் அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கிய சட்டப்பல்கலைக்கழகத்தின் முடிவையும் பாராட்டுகிறேன்.
   சாமானியர்களுக்கும் சட்ட அறிவு: சட்டத்தின் உள்கட்டமைப்பு, நீதிக்கான அணுகுமுறை ஆகியவற்றை சாமானிய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்ற கேள்வி எழுகிறது. சட்ட அறிவை மேம்படுத்துவது, சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை தற்போதைய தேவையாக உள்ளது. நீதியை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமல்ல; வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலும் அது இருக்க வேண்டும்.
   தமிழகம்-கேரளத்தில்... தீர்ப்புகளின் சான்றிதழ் பெற்ற நகல்களை உள்ளூர் அல்லது பிராந்திய மொழிகளில் உயர்நீதிமன்றங்கள் வெளியிடுவதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 2017-ஆம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற கேரள உயர் நீதிமன்ற வைரவிழா நிறைவு நிகழ்ச்சியின் போது நான் இதை வலியுறுத்தினேன். அதன்பின்னர், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியும், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.பி.ராதாகிருஷ்ணனிடம், இந்த கருத்தை வலியுறுத்தினேன். அவர் சில நாள்களிலேயே இந்தத் திட்டத்தை அமல்படுத்தினார்.
   அதன்படி, தற்போது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்புகளை, இந்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த ஆலோசனையை சில உயர்நீதிமன்றங்களும் செயல்படுத்துகின்றன. அதேபோன்று சான்றளிக்கப்பட்ட தீர்ப்பின் நகல்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிலும் வழங்கலாம்.
   எதற்காக வாய்தா?: மக்களுக்கு நீதி விரைவாக கிடைக்கச் செய்வதில் வழக்குரைஞர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது.
   "வாய்தா' எனும் கருவியை அவசர கால நடவடிக்கைக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு தவறாக இது பயன்படுத்தப்படுகிறது.
   இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவரும் ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால், அது நமது குடியரசு முறையை கேலிக்கூத்தாக்கி விடும். இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
   முதல்வர் கே.பழனிசாமி: விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
   நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். தெற்காசிய நாடுகளில் சட்டக்கல்விக்கு என தனியாக ஒரு பல்கலைக்கழகம் தமிழகத்தில்தான் முதல் முதலாக தொடங்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகக் குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான சட்டக் கல்வியை வழங்குவதும் தமிழகத்தில்தான். தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 13 சட்டக் கல்லூரிகள் உள்ளன. அதில் 11 சட்டக் கல்லூரிகள், அரசு சட்டக் கல்லூரிகளாகும். கடந்த ஆண்டு 3 புதிய அரசு சட்டக்கல்லூரிகளைத் தொடங்கினோம். இந்த ஆண்டிலும் மேலும் 3 புதிய அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். சட்டத்தின் பயன்கள் அனைத்தும் ஏழை மக்களைச் சென்றடைய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்த இலக்கை அடைய நீதிமன்றங்களும், நீதிபதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
   கேரள ஆளுநர் சதாசிவம்: டாக்டர் பட்டம் பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளமாநில ஆளுநருமான பி.சதாசிவம் நன்றி தெரிவித்து பேசியது: நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். கடந்த 1970-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் அடியெடுத்து வைத்த நாள் முதல், ஒவ்வொரு நொடியையும் படிப்புக்காக செலவழித்து, சட்ட ஞானத்தை வளர்த்தேன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்புத்தகம் தான் எனக்கு புனித நூல்.
   என்னுடைய மூத்த வழக்குரைஞர், "நீதிமன்ற பணிதான் முதன்மையானது, உணவு உள்ளிட்டவை எல்லாம் அதன்பின்னர் தான்' என அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை தீவிரமாக பின்பற்றினேன் என்றார்.
   இதேபோன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். ஏ. போப்டே, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ஆகியோரும் நன்றி தெரிவித்துப் பேசினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai