தபால்துறை போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதத் தடை: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

தபால் துறை போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தாமல் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று
தபால்துறை போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதத் தடை: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

தபால் துறை போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தாமல் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 மு.க.ஸ்டாலின்: தபால் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்று தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கண்டனத்துக்குரியது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்று கூறி, மத்திய அரசுப் பணிகளில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளவர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு, மத்திய பாஜக செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தப் போக்கைக் கைவிட்டு, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும்.
 கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தபால் துறை தேர்வுகளில் இனி ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத் தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் மீது ஹிந்தி மொழியைத் திணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. இதை மீறி திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை நரேந்திர மோடி அரசு சந்திக்க வேண்டி வரும். ஏற்கெனவே, நடைமுறையில் இருந்தபடி மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அஞ்சல்துறை கேள்வித் தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
 வைகோ (மதிமுக): 2015-ஆம் ஆண்டு நடந்த தபால் துறை பணியாளர்கள் தேர்வில் ஹரியாணா, பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தோர் அதிக மதிப்பெண் பெற்றதாகக் கூறி, தமிழகத்தில் பணி வாய்ப்பு பெற்றனர். இந்த நிலையில் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்பட்டால், இனி முழுக்க முழுக்க ஹிந்திக்காரர்கள் ஆதிக்கம்தான் தபால் துறையில் கொடிகட்டிப் பறக்கும். தமிழர்களின் வேலைவாய்ப்புகளை வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாரி வழங்கும் பாஜக அரசின் நடவடிக்கை நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமச் செயல்.
 விஜயகாந்த் (தேமுதிக): தபால் துறை தேர்வு என்பது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், சாமானியர்களும் எழுதக் கூடியதாகும். இந்த தேர்வை அந்தந்த மாநில மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழியில் தேர்வு எழுத அனுமதிப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் எழுத வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 ராமதாஸ் (பாமக): தபால் துறை தேர்வு நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது. தேசிய அளவில் பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், தபால் துறையில் மட்டும் அதனை ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்குத் தொடரப்படும். ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால் தபால் துறையில் வடஇந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும்.
 கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): தபால் துறை போட்டித் தேர்வுகளை ஹிந்தி, ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக இளைஞர்கள் தபால் துறையில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
 தொல்.திருமாவளவன் (விசிக): தபால் துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பு மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும். தமிழகத்தைச் சாராதவர்களை இங்கே பணியமர்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும்.
 டிடிவி தினகரன் (அமமுக): மத்திய அரசின் அறிவிப்பால் இந்தி பேசாத மாநில மக்கள் அஞ்சல் துறை வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையும். இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
 தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): தபால் துறைப் பணிகளுக்கான தேர்வில் தமிழை நீக்குவதென்பது இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம். மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com