தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை: 3 பேர் மீது வழக்கு; தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதால் நடவடிக்கை

சென்னை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை: 3 பேர் மீது வழக்கு; தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதால் நடவடிக்கை

சென்னை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் முடிவில், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 253 பேர் இறந்தனர். ஈஸ்டர் பண்டிகையைக் குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு உலக நாடுகளை அதிர வைத்தது.
 இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு, இங்கு சில ஆதரவாளர்கள் மறைமுகமாக இயங்கி வருவதினால், அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களை காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
 திடீர் சோதனை: இந்நிலையில் சென்னை மண்ணடி லிங்கு செட்டித் தெருவில் செயல்படும் வஹாத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் நிர்வாகிகள் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக என்.ஐ.ஏ.வுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவலின் அடிப்படையில் தில்லியைச் சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 10 பேர் எஸ்.பி. ராகுல் தலைமையில் சனிக்கிழமை அதிகாலை அந்த அலுவலகத்துக்கு வந்தனர்.
 முன்னதாக அந்த அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அதிகாரிகள் அனுமதி பெற்றிருந்தனர். காலை 6 மணியளவில் சோதனையைத் தொடங்கினர்.
 அதேபோன்று, வேப்பேரி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அந்த அமைப்பின் தலைவரான செய்யது புகாரி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 இந்தச் சோதனை பிற்பகல் 2 மணியைத் தாண்டியும் நீடித்தது. சோதனையில் அங்கிருந்து செல்லிடப்பேசிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். சோதனைக்கு பின்னர் செய்யது புகாரியை அவரது அலுவலத்துக்குச் சென்று, விசாரணை செய்தனர்.
 பின்னர் அதிகாரிகள், அங்கிருந்து செய்யது புகாரி, அவரது கூட்டாளிகள் இருவரை கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
 நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பிரதான சாலையைச் சேர்ந்த யூ.ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர் (30), மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மு. முகம்மது யூசுபுதீன் ஹாரிஸ் முகம்மது (34) ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், இருவர் வீடுகளில் இருந்தும் பென் டிரைவ்கள், மடிக்கணினி, செல்லிடப்பேசி, புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெற்றது. சோதனைக்கு பின்னர் ஹசன் அலியை நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதேபோல வெளியூரில் இருந்த ஹாரிஸ் முகம்மதுவையும் அங்கு வரவழைத்து விசாரணை செய்தனர்.
 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு: இதற்கிடையே சென்னை, நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விசாரணையில் 3 பேரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனராம். இதையடுத்து 3 பேர் மீதும் சட்ட விரோத செயல்பாடு தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சித்தது, இந்திய அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
 4 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், 9 செல்லிடப்பேசிகள், 15 சிம் கார்டுகள், 3 மடிக்கணினிகள், 5 ஹார்டு டிஸ்க், 6 பென் டிரைவ்கள், 2 டேப்லெட், 3 டிவிடி, தடை செய்யப்பட்ட புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தி இஸ்லாமிய அரசை நிறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டதும், இதற்காக தங்களது கூட்டாளிகள் மூலம் நிதி திரட்டியதும், மூளைச் சலவை செய்து இளைஞர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறினர்.
 இன்று கைதாகிறார்கள்: மேலும், 3 பேரிடமும் சனிக்கிழமை நள்ளிரவு தாண்டி விசாரணை நீடித்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) விசாரணை முடிந்த பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஹசன் அலி, நாகப்பட்டினத்தில் மழலையர் பள்ளி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு கருதி தமிழக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com