புதுவையில் ரூ. 8,425 கோடிக்கு பட்ஜெட்: மாநில திட்டக் குழு முடிவு

புதுவையில் ரூ. 8,425 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுவையில் ரூ. 8,425 கோடிக்கு பட்ஜெட்: மாநில திட்டக் குழு முடிவு

புதுவையில் ரூ. 8,425 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்து முடிவு செய்ய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மாநில திட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், எம்.பி.க்கள் மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தங்களையும் அழைத்து கருத்துக் கேட்க வேண்டும் என்று சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
 இதையேற்று, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள், பிராந்திய எம்.எல்.ஏ.க்களை அழைக்க ஆளுநருக்கு முதல்வர் கோப்பு அனுப்பினார். ஆனால், அதை ஆளுநர் கிரண் பேடி கண்டுகொள்ளவில்லை.
 இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் நடைபெற்ற திட்டக் குழுக் கூட்டத்தை அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன், முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
 பின்னர், முதல்வர் நாராயணசாயின் கோரிக்கையை ஏற்று, கடந்த 9-ஆம் தேதி மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள், பிராந்தியங்கள் சார்பில் ஒரு எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
 இந்த நிலையில், மாநில திட்டக் குழுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் வே.நாராயணசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், மு.கந்தசாமி, ஷாஜகான், ஆர். கமலக்கண்ணன், அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன், திமுக குழுத் தலைவர் இரா.சிவா, மாஹே சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், நிதித் துறைச் செயலர் தார்செம்குமார், அரசுச் செயலர்கள் பத்மா ஜெய்வால், அலைஸ் வாஸ், ஜவஹர், அசோக்குமார், பார்த்திபன், சரண், சட்டத் துறைச் செயலர் ஜூலியட் புஷ்பா உள்ளிட்ட அனைத்துத் துறைத் தலைவர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
 இந்தக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றார். அமைச்சரவைக்குத்தான் முழு அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் துணைநிலை ஆளுநரின் சிறப்புப் பணி அலுவலர் தேவநீதிதாஸ் பங்கேற்கவில்லை. ஆளுநரின் கூடுதல் துறைச் செயலர் சுந்தரேசன் மட்டும் பங்கேற்றார்.
 கூட்டத்துக்குப் பின்னர், ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2019 - 20 ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கு ரூ. 8,425 கோடியை ஒதுக்கீடு செய்ய மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பற்றாக்குறையாக உள்ள ரூ. 267 கோடியை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் கோரி பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நிகழாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் கிரண் பேடி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com