முன்னாள் மாணவர்களுக்கு 3 மாதங்களில் மடிக்கணினிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

முன்னாள் மாணவர்களுக்கு 3 மாதங்களில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னாள் மாணவர்களுக்கு 3 மாதங்களில் மடிக்கணினிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

முன்னாள் மாணவர்களுக்கு 3 மாதங்களில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இதற்கான விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். சோழவரம் ஒன்றிய முன்னாள் தலைவரும், ஒன்றிய செயலாளருமான கார்மேகம் வரவேற்றார்.
 தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழக கலாசாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் வி.அலெக்சாண்டர், பி.பலராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 125 மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2019-20-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பில் 6,561 மாணவர்கள், 9,318 மாணவிகள் என 15,879 பேர் படித்து வருகின்றனர். 12-ஆம் வகுப்பில் மாணவர்கள் 6,884 பேர், மாணவிகள் 9,904 பேர் என மொத்தம் 16,788 பேர் படித்து வருகின்றனர்.
 மடிக்கணினி வழங்குவதற்கான இவ்விழாவில் 32,667 பேர் பயனடைகின்றனர். மாதவரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 15 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 1,728 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
 இதேபோல் 12-ஆம் வகுப்பு படிக்கும் 1,646 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதனால் மாதவரம் தொகுதியில் 3,374 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.
 கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் மடிக்கணினி வழங்கப்படும். தற்போது 2 வகுப்புகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு மட்டுமின்றி, மத்திய அரசு நடத்தும் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற 2,000 சொற்றொடர்கள் கொண்ட மென்பொருள் விரைவில் வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.
 விழாவில்,பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்திபன், ஊராட்சி செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதனிடையே, ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலையில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
 இதில், பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆரணி பெண்கள் மற்றும் ஆண்கள் அரசுப் பள்ளி, பொன்னேரி ஆண்கள், பெண்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் மீஞ்சுர், பெரும்பேடு, பழவேற்காடு, காட்டூர் உட்ளிட்ட 12 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் 1,527 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com