
பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றதாகக் கூறி, என்ஐஏ அதிகாரிகளால் நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட இருவரை வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை காலை ஹசன் அலி, ஹாரிஷ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சுமார் 9 மணி நேரத்திற்கும் மேல் நாகப்பட்டினம் அருகே உள்ள மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சிக்கல் பிரதான சாலையில் உள்ள ஹசன் அலி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் அடங்கிய மடிக்கணினி, பென்டிரைவ் மற்றும் செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான, செய்திதாள் செய்திகளும் அவரது வீட்டில் அதிகளவு இருந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஹசன் அலி உறவினரான மஞ்சக்கொல்லை புதின் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹாரிஷ் முகமது இல்லத்திலும் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்து செல்லிடப்பேசி, மடிக்கணினி உள்பட முக்கிய ஆவணங்கள் அடங்கிய பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ஹாரிஷ் முகமது, ஹசன் அலி இருவரையும் பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரிடமும் நள்ளிரவு வரை, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தனர். பின்னர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் செந்தூரபாண்டியன் இல்லத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.