அறிவிக்கப்படாத அவசர கால நிலையா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

அறிவிக்கப்படாத அவசர கால நிலை நிலவுகிறதா என்று இ.பி.கோ. 124 ஏ  சட்டப்பிரிவு குறித்து   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்படாத அவசர கால நிலையா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

சென்னை: அறிவிக்கப்படாத அவசர கால நிலை நிலவுகிறதா என்று இ.பி.கோ. 124 ஏ  சட்டப்பிரிவு குறித்து   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து போராட்டம் நடத்த, எதிர்ப்புகளைத் தெரிவிக்க, விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சி தவிர அநேகமாக மற்ற கட்சிகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காவல்துறையிடம் அனுமதி பெறவே போராட வேண்டியிருக்கிறது. உயர் அதிகாரிகளை சந்தித்தோ அல்லது நீதிமன்றத்தை அணுகியோ தான் அனுமதி பெற வேண்டியதிருக்கிறது அல்லது மக்கள் நடமாட்டமே இல்லாத இடங்களுக்கு அமைப்புகளைத் தள்ளுவது சில குறிப்பிட்ட விஷயங்களை பேசக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது, கூட்டப்பொருளை மாற்றி எழுதித் தர வற்புறுத்துவது போன்ற செயல்பாடுகள் காவல்துறை தரப்பில் அதிகரித்து வருகின்றன.

தர்ணா போன்ற இயக்கங்களுக்கு சில தருணங்களில் அனுமதி கொடுத்துவிட்டு பந்தல், நாற்காலிகளைப் போடக்கூடாது என்று கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது என்று சட்டவிரோதமாக காவல்துறை தடுக்கிறது. 8 வழிச் சுங்கச்சாலை, கோவையில் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனமான சூயசுக்கு கொடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை மூடல் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்துச் சொல்லவும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும் தடை போடப்பட்டு கைது செய்வது - வழக்குப் போடுவது - சிறையிலடைப்பது - தேசத்துரோகப் பிரிவை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது அறிவிக்கப்படாத அவசர கால நிலையாக தெரிகிறது.

இந்நிலை ஜனநாயகத்திற்கும், சட்டவிதிகளுக்கும் முற்றிலும் புறம்பானது. எதிர்வரும் விமர்சனங்களுக்கு பதில் கூற இயலாத போதாமையையும், மக்கள் விரோத கொள்கைகளையும் மூடி மறைக்க மத்திய, மாநில அரசுகள் கருத்துரிமை பறிப்பை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்றன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது தான் தேசத்துரோக குற்றம். சுதந்திர இந்தியாவில் இ.பி.கோ. 124 ஏ பிரிவாக அது தொடர்வது காலனிய தொடர்ச்சியாகும். இப்பிரிவு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் குரலெழுப்ப முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com