காரைக்காலில் இன்று: மாங்கனி இறைத்தல் விழா

 காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைத்தல் விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.  
காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம்.
காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம்.


 காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைத்தல் விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.  
சிவபெருமானால் அம்மையே என்ற அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழாவாக காரைக்கால் கைலாசநாதர் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. காரைக்காலில் அம்மையாருக்கென தனிக்கோயில் அமைந்திருக்கிறது. கணவர் பரமதத்தர் தமக்காக அனுப்பிய மாங்கனியை சிவனடியாருக்கு படைத்த புனிவதியார், கணவர் வந்து சாப்பிடும்போது அனுப்பிய மாங்கனியை கேட்டபோது திகைத்த அவர், இறைவனால் கிடைக்கப்பெற்ற மாங்கனியை கணவருக்குப் பரிமாறினார். இதனால் பெருமைப்பட்டது மாங்கனி. எனவே அம்மையாரை, மாங்கனியை மையமாக வைத்து இந்த திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. காரைக்காலில் கடந்த ஆண்டு வரை 4 நாள்கள் திருவிழாவாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் 5 நாள்கள் திருவிழாவாக நீட்டிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
கைலாசநாதர் கோயிலில் 3-ஆம் நாளான திங்கள்கிழமை பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் பல்வேறு வகையிலான திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆராதனைகள் செய்யப்பட்டன. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனி ஏந்தியவாறு பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.  பக்தர்கள் மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பட்டு வஸ்திரம் சாற்றி வழிபாடு நடத்துவர். அப்போது தெருவெங்கும் உள்ள வீடுகள், வணிக கட்டடங்களின் மேல் தளங்களில் இருந்தவாறு சப்பரம் நகர்ந்த பின்னர் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் இறைக்கப்படும். இந்த காட்சியைக் காணவும், மாங்கனிகளை பிரார்த்தனையின் பேரில் இறைக்கவும், இறைக்கப்படும் மாங்கனிகளை பிடிக்கவும் என ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். 
இரவு 7 மணியளவில் அம்மையார் கோயிலுக்கு சென்றடையும் பிச்சாண்டவருக்கு, அமுதுபடையல் செய்யப்படுகிறது.
41 இடங்களில் தரிசனத்துக்கு ஏற்பாடு: இந்த விழா குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கூறியது :  பிச்சாண்டவர் வீதியுலா நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். சுவாமி வீதியுலா வரும் தெருக்களில்  70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ளதோடு, முதன்முறையாக 11 இடங்களில் உயர் கண்காணிப்பு மேடை  அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பேருந்து நிலையம், ரயில் நிலைய பகுதிகளில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com