சோளத்துக்கான இறக்குமதி வரியை நீக்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

கோழிப்பண்ணையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
சோளத்துக்கான இறக்குமதி வரியை நீக்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்


கோழிப்பண்ணையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-
 நாட்டிலேயே கோழிப் பண்ணை உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் மட்டும் 4 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013-14-ஆம் நிதியாண்டு முதல் 2017-18-ஆம் நிதியாண்டு வரையில் முட்டை உற்பத்தியில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமானது 23.5 சதவீதமாகவும், கறிக்கோழி உற்பத்தி 30.53 சதவீதமாகவும் இருந்தது. பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் இந்தியாவிலேயே தமிழகம் நான்காவது இடத்திலும், முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மக்காச்சோளம் முக்கிய 
உணவு: கோழி உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் தமிழகத்தில் பிராய்லர் கோழி  வளர்ப்புக்கு 1.38 மில்லியன் டன்கள் தீவனம் தேவைப்படுகிறது. இதில், மக்காச்சோளம் முக்கிய தீவனமாக உள்ளது. ஒட்டுமொத்த தீவனத்தில் 47 சதவீதம் மக்காச்சோளமாகும். தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் அதிகளவு சோளம் பயிர் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நிகழாண்டில் மக்காச்சோள பயிர் விளைச்சலில் அமெரிக்கன் படைப்புழு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பயிரிடப்பட்ட 3.55 லட்சம் ஹெக்டேரில் 2.20 லட்சம் ஹெக்டேர் பயிர்களை அமெரிக்கன் படைப் புழு தாக்கி அழித்துள்ளது. விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் சந்தையில் மக்காச்சோளத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், கோழிப் பண்ணையாளர்கள் தீவனத்துக்காக சோளத்தைப் பயன்படுத்த முடியாமல் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
இறக்குமதி வரி: மக்காச் சோளத்தின் விலை அதிகரிப்பால் கோழிப் பண்ணையில் இருந்து உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் முட்டைகள், கறிக்கோழிகளின் விலை கடுமையாக உயரும். இதைத் தவிர்க்க மக்காச்சோளம் உற்பத்தியாகும் நாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்வது அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு மக்காச்சோளம் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், கோழிப்பண்ணையாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும்.
நாடு முழுவதுக்கும் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு லட்சம் டன் சோளத்தை மத்திய அரசு இறக்குமதி செய்யப் போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இப்போதுள்ள தேவைக்கும், விநியோகத்துக்குமான இடைவெளியை நிச்சயம் பூர்த்தி செய்யாது. தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு மாதத்துக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. அடுத்த ஐந்து மாதங்களுக்கு சோளத்தின் தேவை 10 லட்சம் மெட்ரிக் டன்களாகும்.
எனவே, மக்காச்சோளம் கிடைக்கப் பெறாத இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கான இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். சிறப்பு நிகழ்வாகக் கருதி இந்த வரி ரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com