தமிழகத்தைக் காப்பாற்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: ஆர்.நல்லகண்ணு

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்தால் தான், மாநிலத்தைக் காப்பாற்ற முடியும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
தமிழகத்தைக் காப்பாற்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: ஆர்.நல்லகண்ணு


தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்தால் தான், மாநிலத்தைக் காப்பாற்ற முடியும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திங்கள்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் காவிரி டெல்டா பிரதேசங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், நெடுவாசல் உள்ளிட்ட  பகுதிகளில் இந்தத் திட்டத்தை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது, இனி ஹைட்ரோ கார்பன் எடுக்க மாட்டோம் என மத்திய,  மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால், கடந்த மே மாதத்தில் மீண்டும் இந்தத் திட்டத்துக்காக ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மரக்காணம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
இதற்காக, 278 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. குறிப்பாக, விழுப்புரம், புதுவையில் 116 கிணறுகளும், பிற இடங்களில்158-க்கும் மேற்பட்ட கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 10 ஆயிரம் அடி வரை பூமியில் தோண்டி எண்ணெய், ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். அப்போது மேலே உள்ள தண்ணீரும் எடுக்கப்படும். மேல்மட்டத்தில் உள்ள நல்ல நீரை வீணடிப்பர். கடல் நீரும் உள்ளே வந்துவிடும். ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் ஏற்படும் வேதியியல் நிகழ்வு  காரணமாக, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியுள்ளனர்.
இந்தத் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும். மக்களையும் அழித்து, விளைநிலங்களையும் பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, கம்யூனிஸ்ட் சார்பில் தொடர்ந்து போராடி வருகிறோம். உடனடியாக இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் தொடரும். தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி காணப்படுகிறது. தண்ணீருக்கே பாதி ஊதியத்தை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையான வறட்சியானாலும், அதனை சமாளிக்க அரசு அக்கறை காட்டவில்லை.  நீர்வழி ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை, நிலம் ஆக்கிரமிப்பால் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மக்கள் ஒத்துழைப்புடன்தான், நீர்நிலையைப் பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களை வைத்து நீராதாரங்களை சீரமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com