ஹிந்தி-ஆங்கிலத்தில் தபால் தேர்வு: தமிழக அரசின் பதிலுக்கு திமுக-காங். கடும் எதிர்ப்பு: பேரவையில் இருந்து வெளிநடப்பு

ஹிந்தி, ஆங்கிலத்தில் தபால் தேர்வு நடத்தப்பட்ட பிரச்னையில் தமிழக அரசின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த திமுக  உறுப்பினர்கள். 
சட்டப்பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த திமுக  உறுப்பினர்கள். 


ஹிந்தி, ஆங்கிலத்தில் தபால் தேர்வு நடத்தப்பட்ட பிரச்னையில் தமிழக அரசின் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். இதே விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
தபால் துறை தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வையும் நடத்தியது. மாநில மொழிகளில் தேர்வை நடத்தாமல், இரு மொழிகளில் மட்டுமே நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தப் பிரச்னை சட்டப் பேரவையிலும் திங்கள்கிழமை எதிரொலித்தது. கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு இந்தப் பிரச்னையை எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:-
தங்கம் தென்னரசு: கடந்த ஜூலை 11-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு நடத்தப்படும் என விதிகளில் திருத்தம் செய்தது. தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தபால் துறை போன்ற மத்திய அரசுப் பணிகளுக்கு வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இது தமிழர்களின் உணர்வுகளைத் தட்டிப் பறிக்கும் செயலாகும். இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கும் செயலில் இருந்து மீறியதுடன், ஓரவஞ்சனையான நடவடிக்கையாகவும் பார்க்கிறோம். எனவே, இந்த இந்த விவகாரத்தில் பேரவையில் சிறப்பு விவாதம் நடத்தி நமது உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும்.
பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்: தபால் துறை தேர்வை நடத்தும் மொழிகள் குறித்த முடிவு அகில இந்திய ரீதியில் எடுக்கப்பட்டது. தமிழக அரசைப் பொருத்த வரையில் இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ஹிந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தைப் பொருத்தவரை இருவரும் (திமுக, அதிமுக) ஒரே படகில்தான் பயணித்து வருகிறோம். எனவே, நாடாளுமன்றத்தில் உங்களது எம்.பி.,க்களையும் குரல் எழுப்பச் சொல்லுங்கள். நாங்களும் குரல் எழுப்புகிறோம். நமது உரிமையை நிலைநாட்டுவோம். இதற்கான முயற்சிகளை தமிழக அரசு நிச்சயம் எடுக்கும்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: பேரவையில் ஒருமித்த கருத்துடன் தீர்மானத்தை இயற்றி அதனை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசைக் கண்டித்து உங்களால் (தமிழக அரசு) தீர்மானம் நிறைவேற்ற முடியாது. குறைந்தபட்சம் வலியுறுத்தியாவது தீர்மானத்தை நிறைவேற்ற முடியாதா?
அமைச்சர் ஜெயக்குமார்: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுப்பது ஒருவகை. நாடாளுமன்றத்திலும் கட்சிகள் ரீதியாக குரல் எழுப்புவோம். உரிமைகளை நிலைநாட்டுவோம்.
துரைமுருகன்: இந்தப் பேரவைதான் பலமான ஒன்று. இந்த விஷயத்தில் நம் இருவருக்கும் ஒரே கொள்கைதான். எனவே, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருவதில் என்ன தயக்கம்.
         (இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் பி.தனபால் தனது அடுத்த அலுவல்களுக்குச் சென்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வற்புறுத்தினர்.)
துரைமுருகன்: தபால் துறை தேர்வு விஷயத்தில் அமைச்சர் பதிலளித்தார். அதில் தலையிடவில்லை. ஆனால், ஹிந்தி திணிப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அதனை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமையான கருத்தின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இப்படித் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது. ஹிந்தி திணிப்பு என்பதுதான் பிரச்னை. அதை எதிர்த்து தீர்மானம் உண்டா, இல்லையா?
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஹிந்தியில் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பிரச்னை எழுப்பப்பட உள்ளது. அப்போது மத்திய அரசு என்ன முடிவை தெரிவிக்கிறதோ அதன்படி தமிழக அரசு நிலைப்பாட்டை எடுக்கலாம். நாம் அனைவரும் இணைந்து ஒருமித்த கருத்துடன் ஒருமுடிவை எட்டலாம்.
துரைமுருகன்: நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பும் போது குழப்பம் ஏற்பட்டால் ஒத்திவைப்பார்கள். அவ்வளவுதான். ஹிந்தி பிரச்னையில் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். ஹிந்தி திணிப்பு பிரச்னையில் நம்முடைய மன்றத்தில் நாம் என்ன செய்யலாம் என்பதுதான் கேள்வி.
முதல்வர் பழனிசாமி: தபால் துறை தேர்வுக்கான உத்தரவை போட்டது மத்திய அரசு. எனவே, நாடாளுமன்றத்தில்தான் வாதிட முடியும். அங்கு வாதாடுவதில் என்ன தவறு. பிரச்னையை அங்கு எழுப்பும் போதுதான் பதில் கிடைக்கும். ஆனால், வெளிநடப்புச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளீர்கள்.
துரைமுருகன்: இது உணர்வுப்பூர்வமான பிரச்னை. ஹிந்தி எதிர்ப்பு என்பது எங்களுடைய உணர்வோடும், உயிரோடும், இரத்தத்திலும் கலந்துள்ளது. உங்களுக்கும் (அதிமுக) அதே உணர்வுகள்தான் உள்ளன. 
ஆனால், முதல்வர் தனது விளக்கத்தைச் சொல்லும் போது வெளி நடப்புச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்துள்ளதாகக் கூறினார். இது எங்களது உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதால் அதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறோம்.
தபால் துறை தேர்வு தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com