சுடச்சுட

  

  முதல்வர் காப்பீட்டுத் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை அளிப்பது ஏன்?: அமைச்சர் விளக்கம்

  By DIN  |   Published on : 17th July 2019 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijayabaskar


  முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறுவது ஏன் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
  சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சரவணன் பேசும்போது, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று உள்ளது. இது ஏற்புடையதா' என்று கேள்வி எழுப்பினார்.
  அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு கூறியது: 
  தனியார் மருத்துவமனைகள் பணம் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சில தவறுகளைச் செய்கின்றனர். இது தொடர்பாக கண்டுபிடித்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கர்ப்பப் பைக்கு சிகிச்சை என்று சென்றால், கர்ப்பப் பையையே எடுத்துவிடுகின்றனர். அதுபோன்ற நிலை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்கிறோம்.
  திமுக உறுப்பினர் பிச்சாண்டி: அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவம் என்பது மாறி, இப்போது காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மருத்துவம் பார்க்கும் நிலை வந்துவிட்டது. பணம் வசூலிக்கும் இடமாக அரசு மருத்துவமனைகள் மாறிவிட்டன.
  அமைச்சர் விஜயபாஸ்கர்: உணவில் முழு பூசணிக்காயை மறைப்பதுபோல திமுக உறுப்பினர் பேசுகிறார். மொத்தமே 224 அரசு மருத்துவமனைகளில்தான் முதல்வர் காப்பீட்டுத்  திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது இதர அரசு மருத்துவமனைகளில் எப்படிச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை உறுப்பினர் சொல்ல முடியுமா?, திமுக ஆட்சியில் ஸ்டார் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பணம் எல்லாம் தனியாருக்கே சென்றது. அதுபோன்று இப்போதும் செய்ய வேண்டும் என்று திமுக உறுப்பினர் குறிப்பிடுகிறாரா எனத் தெரியவில்லை. அது நடக்காது. அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  திமுக உறுப்பினர் சரவணன்: விபத்தில்  ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால்,  தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாமா, அரசு மருத்துவமனைக்குச் செல்லாமா என்பதை அடிபட்டவர்தான் முடிவு செய்ய வேண்டும். காப்பீட்டுத் திட்டத்துக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்பது சரியா? மருத்துவம் எங்கு பார்ப்பது என்பது நோயாளியின் உரிமை இல்லையா?
  அமைச்சர் விஜயபாஸ்கர்: தனியார் மருத்துவமனைகளை எல்லாம் விட, அரசு மருத்துவமனைகளில்தான் தலைசிறந்த மருத்துவர்கள் இருக்கின்றனர். 
  தனியார் மருத்துவமனைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன. அதன் காரணமாகத் தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறுகிறோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai