கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா?: பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் 

கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? என்று பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா?: பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் 

சென்னை: கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? என்று பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த சில நாட்கள் முன்பு அகரம் அறக்கட்டளையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுகள் திணிப்பு ஆகியவைகளால் எழும் பிரச்சனைகள் குறித்து மிக அவசியமான விமர்சனங்களை நடிகர் சூர்யா முன்வைத்தார்.

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும், அதையும் அரசு பொதுக்கல்வி முறையில் வழங்க வேண்டும், தாய்மொழி வழியில் கல்வி வேண்டும் என்பதெல்லாம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும் உள்ள கோரிக்கைகள் அல்ல. புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழலில், தேவையான கருத்துக்களை நடிகர் சூரியா தெரிவித்துள்ளார். சமூக அக்கறையோடு கருத்து தெரிவித்த  நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கேட்பு காலத்தை நீடிக்க  கோரியதைத் தொடர்ந்து  அரசாங்கம் கால நீட்டிப்பும் செய்திருக்கிறது. இதுவரையில் மக்களுக்காக முன்நின்று எதையும் செய்திராத தமிழக பாஜக தலைவர்கள், கல்விக் கொள்கையில் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்போர் மீது பாயத் தொடங்கியுள்ளனர்.

மத்திய ஆட்சியை வைத்துக் கொண்டு எதுவும் செய்வோம், யாரும் எதிர்த்து கேட்கக் கூடாது என்று மிரட்டுகிற தொனியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் நடிகர் சூர்யா மீது அவதூறு கூறுகின்றனர். சூரியாவை அவதூறு செய்த பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கடும் கண்டனைத்தை தெரிவித்துக் கொள்கிறது. விழிப்புடன் மக்கள் எதிர்க்கும்போதே, எதையும் செய்யத் துணிகிற ஆட்சியாளர்கள், எதிர்ப்புக் குரல்கள் முடங்கிப்போனால் எதேச்சாதிகாரம்தான் செய்வார்கள்.

எனவே, உண்மையைப் பேசிய நடிகர் சூர்யா உடன் நிற்க வேண்டியது நமது கடமையாகும். கல்விக் கட்டமைப்பையே சீரழிக்கவுள்ள புதிய கல்விக் கொள்கையின் பாதகமான பகுதிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, எதிர்க்குரல்களை வலுப்படுத்துவோம் என அழைக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com