தர்மேந்திர பிரதான் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கிற துணிவு இருக்கிறதா? 

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கிற துணிவு அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறதா என்று மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி..
தர்மேந்திர பிரதான் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கிற துணிவு இருக்கிறதா? 

சென்னை: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கிற துணிவு அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறதா என்று மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேற்று சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதன் முதலில் அனுமதி அளித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்று கூறி, காங்கிரஸ் - தி.மு.க. மீது குற்றம்சாட்டி, பிரச்சினையை திசைதிருப்ப அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார்.  இது முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கின்ற முயற்சியாகும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நாள் 30 ஜூன் 2015. ஆனால், இந்த நாட்களில் மத்தியில் ஆட்சி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசா ? பா.ஜ.க. அரசா ? என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் தெளிவுபடுத்துவாரா ? இந்த அனுமதியை வழங்குகிற வகையில் 24 பரிசோதனை கிணறுகளை தோண்ட திருவாரூர், திருமருகல், குடவாசல், கீவ;ர் பகுதிகளில் அனுமதி அளித்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதை தடுத்து நிறுத்தாமல், கண்டும் காணாமலும் இருந்தது தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தில்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதற்காக, தமிழகத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நாகை மாவட்டம் மாதாணம் ஆகிய இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் கையொப்பம் இட்டிருக்கிறது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகம் நேரிடையாக பதில் கூற தயாராக இல்லை.

தமிழக அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகிறார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறுகள் தோண்டுவதற்கும், கூடுதலாக இரண்டு கிணறுகள் தோண்டுவதற்கும் புதிதாக ஒப்பந்தம் போட்டிருக்கிற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் எப்போது கிரிமினல் நடவடிக்கையை அமைச்சர் சண்முகம் எடுக்கப்போகிறார் என்பதை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அத்தகைய நடவடிக்கை எடுக்கிற துணிவு அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com