எம்ஜிஆரின் தலைவர் கருணாநிதியா?: திமுக-அதிமுக விவாதம்

எம்ஜிஆரின் தலைவர் கருணாநிதியா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
எம்ஜிஆரின் தலைவர் கருணாநிதியா?: திமுக-அதிமுக விவாதம்


எம்ஜிஆரின் தலைவர் கருணாநிதியா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சரவணன் பேசும்போது, எங்கள் தலைவர் (கருணாநிதி) தான் உங்கள் தலைவருக்கும் (எம்ஜிஆர்) தலைவராக இருந்தார்' என்று கூறினார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டு, கருணாநிதி முதல்வராக காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்தான். எங்கள் தலைவர் எம்ஜிஆர்தான். கருணாநிதி எங்களுக்கு எப்போதும் தலைவராக முடியாது' என்றார்.
திமுக உறுப்பினர் எ.வ.வேலு: கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர்தான் காரணம் என்று அமைச்சர் கூறினார். அதில் தவறு எதுவும் இல்லை.  ஆனால், எங்கள் உறுப்பினர் (திமுக), எம்ஜிஆரின் தலைவராக கருணாநிதி இருந்தார் என்றுதான் கூறினார். திமுகவின் தலைவராக கருணாநிதிதான் இருந்தார். பொருளாளராக எம்ஜிஆர் இருந்தார் என்பதுதான் வரலாறு. இதை மாற்ற முடியாது.
அமைச்சர் தங்கமணி: 1971-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஊழல் செய்யாமல் ஆட்சி செய்வார் என்று மக்களிடம் எம்ஜிஆர் வாக்குறுதி கொடுத்ததன் காரணமாகத்தான் அப்போதைய தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து கருணாநிதி முதல்வராக இருந்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக்கே வர முடியவில்லை என்பது சரித்திரம் என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து பதில் அளிக்க முற்பட்டனர். பேரவைத் தலைவர் தனபால் அனுமதி தரவில்லை. இதனால், சிறிது நேரம் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு  தெரிவித்தனர். பிறகு அவை அலுவல்கள் தொடர்ந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com