காதல் திருமணம் செய்த மகள் தற்கொலை: மருமகனை கொல்ல கூலிப் படை வைத்த மாமனார் கைது

காதல் திருமணம் செய்த மகள் தற்கொலை செய்து கொண்டதால், மருமகனை கொலை செய்ய மாமனார் கூலிப் படையுடன் வந்த தகவல் வெளியாகியுள்ளது.
காதல் திருமணம் செய்த மகள் தற்கொலை: மருமகனை கொல்ல கூலிப் படை வைத்த மாமனார் கைது


காதல் திருமணம் செய்த மகள் தற்கொலை செய்து கொண்டதால், மருமகனை கொலை செய்ய மாமனார் கூலிப் படையுடன் வந்த தகவல் வெளியாகியுள்ளது.

போடி பகுதியில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றுள்ளனர். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை, போடி நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரித்தனர். 

அதில், மதுரை மாவட்டம் சமயநல்லூர் தாலுகா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் வீரையா (49), வாடிப்பட்டி தாலுகா தனிச்சியம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சேகர் மகன் ஜெகன் (29), சமயநல்லூரைச் சேர்ந்த முத்து மகன் கணேசன் (24), திருவேடகம் தெற்கு தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் ரேவந்த் (24), திருவேடகம் கிழக்கு தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் குமரவேல் (27) மற்றும் திருவேடகம் தெப்பக்குளம் மந்தை கருப்பணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வேதவடிவேல் மகன் நாகமணி (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

போடிமெட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக சமயநல்லூர் சென்றுள்ளார். அப்போது, வீரையா மகள் தமிழ்செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து, இவர்கள் இருவரும் போடி குப்பிநாயக்கன்பட்டியில் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே, குடும்பப் பிரச்னையில் கடந்த 1.1.2019 ஆம் தேதி தமிழ்செல்வி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கர்ப்பிணியாக இருந்த இவரை தற்கொலைக்கு தூண்டியதாக, ஜெயபால் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, ஜெயபால் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெயபாலை கொலை செய்வதற்காக திட்டமிட்ட வீரையா, கூலி படையினரை வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது என்றனர். 

இது குறித்து போலீஸார் மாமனார் உள்பட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

தகுந்த நேரத்தில் செயல்பட்டதால், கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாக, போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, ரோந்து காவலர்கள் வெற்றிவேந்தன், ஸ்ரீதர் ஆகியோரை, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com