செந்தில் பாலாஜி விவகாரம்: பேரவையில் கூச்சல் குழப்பம்

அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது திமுக ஆட்சி குறித்து பேசியதை அமைச்சர் குறிப்பிட்டதால் பேரவையில் 20 நிமிடங்களுக்கு மேலாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 
செந்தில் பாலாஜி விவகாரம்: பேரவையில் கூச்சல் குழப்பம்


அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது திமுக ஆட்சி குறித்து பேசியதை அமைச்சர் குறிப்பிட்டதால் பேரவையில் 20 நிமிடங்களுக்கு மேலாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 
சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பொன்ராஜ் பேசும்போது போக்குவரத்துத் துறையில் அதிமுக அரசு செய்த சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது திமுக உறுப்பினர் செங்குட்டுவன் எழுந்து பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டார்.  பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வாய்ப்பு கொடுத்தார். செங்குட்டுவன் எழுந்து போக்குவரத்துத் துறையில் திமுக ஆட்சியில் சாதனை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எழுந்து, இப்போது திமுக உறுப்பினராகியுள்ள செந்தில் பாலாஜி அப்போது அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதல்வர் (திமுக) ஆட்சியில் பிச்சைப்பாத்திரமாக இருந்த போக்குவரத்துத் துறையை ஜெயலலிதா அட்சயப்பாத்திரமாக மாற்றிக் காட்டினார் என்று குறிப்பிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 
பேரவைத் துணைத் தலைவர்: அமைச்சர் அவைக்குறிப்பில் உள்ளதைத்தான் குறிப்பிட்டார். அதில், தவறு ஒன்றுமில்லை என்றார். இதே கருத்தை அமைச்சர் தங்கமணியும் குறிப்பிட்டார். இதை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 
அமைச்சர் டி.ஜெயக்குமார்: செந்தில் பாலாஜி பேசிய ஒரு உதாரணத்தைத்தான் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
இதுபோல பல வரும் என்றார்.
திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து குரல் கொடுத்தனர். அதைப் பொருட்படுத்தாமல் பேரவைத் துணைத் தலைவர் அதிமுக உறுப்பினரை தொடர்ந்து பேசுமாறு கூறினார். ஆனால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.  அதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். ஒரு கட்டத்தில் பேரவைத் துணைத் தலைவரை மீறி திமுக - அதிமுக உறுப்பினர்களும் ஆவேசமாக மாறிமாறி கைகளை உயர்த்திக் கொண்டு பேசிக் கொண்டனர். அந்த நேரத்தில் பேரவைத் தலைவர் தனபால் அவைக்குள் வந்தார். திமுக - அதிமுக உறுப்பினர்களை முதலில் அமருமாறு உத்தரவிட்டார். 
பேரவைத் தலைவர் தனபால்: அவை நடவடிக்கைகளை என்னுடைய அறையில் இருந்துதான் கவனித்துக் கொண்டிருந்தேன். அமைச்சர் அவைக்குறிப்பில் இருந்ததைத்தான் படிக்கிறார். இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் திமுக உறுப்பினர் கூறலாம் என்று திமுக கொறடா சக்கரபாணியை பேசுவதற்கு வாய்ப்புக் கொடுத்தார்.
அர.சக்கரபாணி: மறைந்த தலைவர்கள் குறித்து அவையில் பேசக்கூடாது என்று ஏற்கெனவே கூறியுள்ளீர்கள். அதை நாங்கள் பின்பற்றுகிறோம். அவைக் குறிப்பில் வைத்து அமைச்சர் படிக்கிறார் என்றால், அதுபோல் நாங்களும் உங்கள் தலைவர் குறித்து அவைக் குறிப்பை  வைத்து படிக்கலாமா?
பேரவைத் தலைவர்: மறைந்த தலைவர்கள் குறித்து கண்ணியமாகப் பேசவேண்டும் என்று கண்டிப்பாக எல்லா உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கிறேன்.
அப்போது அவைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உங்கள் கட்சியின் முன்னாள் முதல்வரை எங்கள் தலைவர்கள் யாரும் தவறாக எப்போதும் விமர்சித்தது இல்லை. இப்போது உங்கள் தலைவரை விமர்சிக்கவில்லை. இங்கிருந்தபோது இப்படி பேசியவர் (செந்தில்பாலாஜி) அங்கு வந்துள்ளார். எச்சரிக்கையாக இருங்கள் என்றுதான் கூறுகிறோம் என்றார்.
முதல்வரின் கருத்தைத் தொடர்ந்தும் திமுகவினர் எதிர்த்து குரல் கொடுத்து, அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கூறினர். அவைக் குறிப்பில் உள்ளதை மாற்றமுடியாது என்று பேரவைத் தலைவர் உறுதியாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்தும் நீண்ட நேரம் திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மாறிமாறிப் பேசி ஒரு கட்டத்தில் அமைதியாக உட்கார்ந்தனர்.
அதன் பிறகு, திமுக உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பேசிய முடித்ததற்குப் பிறகு மீண்டும் திமுக கொறடா சக்கரபாணி எழுந்து, அமைச்சர் பேசும்போது எங்கள் தலைவர் பெயரைக் குறிப்பிட்டுப்  பேசினார். அதனை நீக்க வேண்டும். இதுவரை எல்லாம் அமைச்சர்களின் பதிலுரையை அமர்ந்து கேட்டிருக்கிறோம் என்று கூறினார். திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதற்குத் தயாராகினர்.
அதைத் தொடர்ந்து திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டு பெயர் நீக்கப்பட்டு முன்னாள் முதல்வர் என்று பதிவு செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதியாக அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். இந்த விவகாரத்தில் 20 நிமிஷங்களுக்கு மேலாக அவை கூச்சல் குழப்பத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com