பனை மர வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் 2.5 கோடி பனை விதைகள்

பனை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ரூ.10 கோடியில் 2.5 கோடி பனை விதைகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். 
பனை மர வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் 2.5 கோடி பனை விதைகள்


பனை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ரூ.10 கோடியில் 2.5 கோடி பனை விதைகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ், அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-
வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, நிகழாண்டில் ரூ.10 கோடியில் 2.5 கோடி பனை விதைகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படும். இந்தப் பணி எதிர்காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தரமான இடுபொருள்களைச் சேமித்து விவசாயிகளுக்கு விநியோகிக்க, இதுவரை 17 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை அரசு மேம்படுத்தியுள்ளது. நிகழாண்டில் 100 விதை சேமிப்புக்கிடங்குகளுடன் கூடிய மையங்கள் ரூ.40 கோடியில் கட்டப்படும்.
நீள இழை பருத்திகள்: தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை, மிக நீள இழை பருத்தி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இந்த ரகங்களை சாகுபடி செய்தால், பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்பதால், நிகழாண்டில் மிக நீள இழைப் பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருள்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்க ரூ.11 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறுதானியப் பயிர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பதால், அதனுடைய சாகுபடியை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரசாரங்கள், பயிற்சிகள் போன்ற பணிகளுக்காக நிகழாண்டில் ரூ.13.20 கோடி நிதி ஒதுக்கப்படும். சென்னை வண்ணாரப்பேட்டையில் வேளாண் பொறியியல் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. அங்கு 5.5 ஏக்கர் நிலத்தில் ரூ.5 கோடி செலவில் தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும். மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக, நிகழாண்டில் மேலும் 150 மதிப்புக் கூட்டும் மையங்களை உருவாக்குவதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நிகழாண்டில் 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்துவதற்காக இத்தகைய இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விலைக்கு வாங்க நிகழாண்டில் ரூ.70.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
குமரியில் மதிப்பு கூட்டும் மையம்: தென்னை அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டமான கன்னியாகுமரியில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய, விலை ஆதரவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 90 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், 100 உழவர் சந்தைகளிலும் கூடுதலாக கடைகள், மின்னணு எடைமேடை, கணினி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
  மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பண்ணை அளவில் விளைப்பொருள்களைப் பாதுகாக்க சூரியசக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகளை நிறுவிடத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.100 கோடியில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பழங்கள், காய்கறிகள் உள்பட விரைவில் அழுகும் பொருள்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரூ.482 கோடியில் 509 சேகரிப்பு மையங்கள், 62 முதல்நிலை பதப்படுத்தும் அலகுகள் ஆகியவற்றை அமைக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் செயலாக்கத்துக்குக் கொண்டு வரப்படும். இந்தத் திட்டமானது சேலம், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com