வேலை உறுதியளிப்பு திட்டத்தை கைவிடுவதா? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் 

வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடரும் நோக்கம் இல்லை என்னும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலை உறுதியளிப்பு திட்டத்தை கைவிடுவதா? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் 

சென்னை: வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடரும் நோக்கம் இல்லை என்னும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில், வேலை உறுதியளிப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்திட வேண்டும். வேலை நாட்களை நூறு நாட்களிலிருந்து இருநூறு நாட்களாக அதிகபடுத்தி தினசரி ஊதியத்தை ரூ.300ஆக உயர்த்திட வேண்டும் என்றும் இத்திட்டத்தை கிராமம் சார்ந்த பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமென வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடர அரசுக்கு விருப்பம் இல்லை என்று அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.

ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தை நம்பியே உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டே  தங்களின் வாழ்நாளினை கழித்துக் கொண்டுள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பு ஒரு வேளை கஞ்சிக்கு கூட வழியற்ற நிலையை ஏழைகளுக்கு ஏற்படுத்தும் அபாயகரமான அறிவிப்பாகும். மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதுடன், எக்காரணம் கொண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தை கைவிடல் கூடாது, மேலும் இத்திட்டத்தை பலப்படுத்தி, செயல்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com