
தமிழகத்தில் பெரிய மாவட்டங்களைப் பிரித்து மொத்தம் 60 மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உதயமாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் பெரியவையாகவே உள்ளன. ஒவ்வொரு மாவட்டமாக பிரிப்பதைவிட இந்த மாவட்டங்களை ஒரே நேரத்தில் பிரிப்பதுதான் சரியாக இருக்கும்.