மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா?: முதல்வர் - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே
மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா?: முதல்வர் - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.பொன்முடி பேசியது:

கடந்த ஆண்டு முதல்வர் அளித்த பதிலுரையில் முடிவு எடுப்பதில் மக்கள் தெளிவானவர்கள் என்று கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக அணியை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது:

எப்படி வெற்றிபெற்றீர்கள்  என்பதை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. என்னென்ன அறிவிப்புகள் எல்லாம் வெளியிட்டீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும். உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை எல்லாம் சொல்லித்தான் வெற்றிபெற்றீர்கள். அதையும் நீங்கள் கூறினால், நன்றாக இருக்கும் என்றார்.

மு.க.ஸ்டாலின்: வரக்கூடிய காலகட்டங்களில் திமுக ஆட்சிக்கு வரும். அப்படி வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். சொன்னதை அல்ல, சொல்லாததையும் செய்வோம். எனவே, அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எங்களைப் பொருத்தவரை உண்மையைச் சொன்னோம். எதைச் செய்ய முடியுமோ அதைச் சொன்னோம். அதற்கு எங்களுக்கு ஒரு இடம் கொடுத்துள்ளனர். கடந்த காலங்களில் திமுகவுக்கு எவ்வளவு இடம் கிடைத்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஆட்சி என்பது மாறிமாறி வந்து கொண்டிருக்கிறது. எனவே, சக்கரம் மேலே வரும், கீழே வரும். கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். அதனால், 2021-லும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும்.

மு.க.ஸ்டாலின்: முதல்வரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதுபோல பேசியுள்ளார். கீழேயுள்ள சக்கரம் மேலே வரும். மேலே உள்ள சக்கரம் கீழே வரும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்த நீங்கள் வெற்றிபெற முடியும்போது, நாங்கள் ஏன் வெற்றிபெற முடியாது?. இப்போது நடந்தது மக்களவைத் தேர்தலே ஒழிய, சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் உங்களுக்கு வாக்களித்துவிட்டார்கள்.
மு.க.ஸ்டாலின்: 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், 13 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. 9 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. 13 பெரிதா, 9 பெரிதா? அதனால், மக்கள் தெளிவோடு திமுகவுக்குத்தான் வாக்களித்துள்ளனர். மேலும், உங்கள் வசம் இருந்த 12 தொகுதிகளைத்தான் நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையெல்லாம் வாரிவாரி கொடுத்துதான் வெற்றிபெற்றீர்கள். அது உண்மையான வெற்றியல்ல. மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் தனித்தனியாக தேர்தல் வந்திருந்தால், எங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியிருப்போம்.

அமைச்சர் செல்லூர் ராஜூ: வாய் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்றெல்லாம் பேசமாட்டேன். ஏனென்றால் நான் கலைஞரின் பிள்ளை என்று ஸ்டாலின் கூறுவார். தேர்தல் அறிக்கையில் 5 பவுனுக்குக் கீழே கடன் இருந்தால், கூட்டுறவு வங்கியில் மட்டுமல்ல, பொது வங்கியில் கடன் இருந்தாலும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார். இதை நிறைவேற்ற முடியுமா?. தேர்தலில் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்பதுதான் உண்மை. 

மு.க.ஸ்டாலின்: வாய் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ எனப் பேசமாட்டேன் என்று கூறியது உண்மைதான். இப்போதும் கூறுகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கேளுங்கள்.  அனைத்துக்கும் பதில் அளிக்கிறோம்.

கே.ஏ.செங்கோட்டையன்: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 25 ஆயிரம் பேருக்கு 3 சென்ட் இடம் திமுகவின் வேட்பாளரே தரப் போகிறார் என்று கூறினீர்கள். அதைக் கொடுத்திருக்கிறீர்களா என்றார்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரவக்குறிச்சி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜியைப் பேசுவதற்கு அனுமதிக்குமாறும் கோரினர். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.

பொன்முடி: மக்கள் என்ன ஏமாளிகளா?. தமிழக மக்கள் எப்போதும் முடிவு எடுப்பதில் தெளிவானவர்கள் என்று முதல்வர்தான் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அதைத்தான் நானும் கூறுகிறேன். மக்களை ஏமாற்றித்தான் திமுக வெற்றிபெற்றது. இப்போது நடைபெற்றது சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலா, நீங்கள் வாக்கு கொடுப்பதற்கு? ஆட்சிக்கு வர முடியாதபோது நீங்கள் எப்படி வாக்கு கொடுத்தீர்கள்?

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com