சுடச்சுட

  

  கர்நாடகம் திறந்துவிட்ட காவிரி நீர் ஒகேனக்கல் வந்தடைந்தது

  By DIN  |   Published on : 21st July 2019 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Hogenakkal-falls3

   

  கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

  கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  இந்த நிலையில், கர்நாடக மாநில விவசாயிகள் அண்மையில் பாசனத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட  வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

  அதேபோல,  தமிழகமும் தங்களுக்கான தண்ணீரை காவிரியிலிருந்து திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை மேலாண் வாரியத்திடம் முன் வைத்தது.  காவிரி மேலாண் வாரியம் தண்ணீர் திறக்கக் கோரி உத்தரவிட்டும்,  மழை பொழிந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.  

  இந்த நிலையில், தற்போது தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைகள் நிரம்பி வருவதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கடந்த 16-ஆம் தேதி சுமார் 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் சனிக்கிழமை காலை ஒகேனக்கல் அருகேயுள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. நீர்வரத்து குறித்து மத்திய நீர் ஆணையப் பொறியாளர்கள், அலுவலர்கள் பிலிகுண்டுலுவில் அளவீடு செய்தனர். இதில், காவிரியில் நீர்வரத்து சிறிதளவு கூடியிருப்பது தெரியவந்தது. இந்த தண்ணீர் சில மணி நேரத்தில் ஒகேனக்கல் அருவியை வந்தடைந்தது. மேலும்,  கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீருடன் கடந்த இரண்டு நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் பொழியும் மழைநீரும் இணைந்து வருகிறது. இதனால், கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீர் சுமார் 500 கன அடியும், மீதமுள்ள நீர் மழைநீரும் கலந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை வரை நொடிக்கு சுமார் 200 கன அடி தண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருந்தது.  

  தற்போதைய நிலவரப்படி நொடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.  மேலும், கர்நாடகத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து சுமார் 5,100 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

  இந்த தண்ணீர் வருகிற திங்கள்கிழமை பிலிகுண்டுலுவை வந்தடையலாம் எனக் கூறப்படுகிறது.  இதனால்,  ஒகேனக்கல் காவிரியில் ஒரிரு நாள்களில்  நீர்வரத்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல, காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்பாக பொதுப்பணித் துறை மற்றும் மத்திய நீர் ஆணையப் பொறியாளர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai