மக்களை திமுக ஏமாற்றிவிட்டது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வாக்குறுதி எனும் மிட்டாயைக் கொடுத்து மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறினார்.
மக்களை திமுக ஏமாற்றிவிட்டது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வாக்குறுதி எனும் மிட்டாயைக் கொடுத்து மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறினார்.

சட்டப்பேரவையில் நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: 

மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி தவிர, அனைத்து இடங்களிலும் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.  இந்த மகத்தான வெற்றியை வாரி வழங்கியிருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. அதேபோல், சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13 தொகுதிகளை  திமுக கைப்பற்றி இருக்கிறது. அதைவிட முக்கியமாக 12 தொகுதிகளை ஆளுங்கட்சியிடமிருந்து திமுக பறித்திருக்கிறது. அதனால்தான் இது மகத்தான வெற்றி என்று சொல்கிறேன்.  இந்த வெற்றியைத்தான் சின்னப்பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதுபோல, ஏமாற்றி விட்டார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.  இதைவிட தமிழக மக்களை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.  நாங்கள் கொடுத்தது வாக்குறுதிகள்தான். மிட்டாய்கள் அல்ல. திமுகவினுடைய வாக்குறுதிகள் குறித்து இதே சட்டப்பேரவையில் ஒரு சிறப்பு விவாதத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.  நீங்கள் தயாரா? தேர்தலில் தோற்றவர்கள் நீங்கள்.  தோல்வியை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.  ஏன் தோற்றோம் என்பதை முதலில் யோசியுங்கள்.  திமுகவையோ, தமிழ்நாட்டு மக்களையோ கொச்சைப்படுத்தாதீர்கள் என்றார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: அதிமுக அரசால் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மின்சாரத் துறை, வேளாண்மைத் துறை என அனைத்துத் துறைகளிலும் ஒரு சகாப்தத்தை படைத்துக் கொண்டிருக்கிறோம். வாக்காளர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக திமுகவினரை நான் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். அது, வாக்குறுதி  என்ற மிட்டாயைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்றுதான் குறிப்பிட்டேன்.  வார்த்தை ஜாலங்களைப் பிரயோகித்து, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் ஏதாவது பேசி சமாளிக்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பேசி வருகிறார். திமுகவினரால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை. தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்று, அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால் உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எப்படி இந்த மாதிரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்?. எனவேதான், வாக்குறுதி  என்ற மிட்டாயைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டேன். 

மு.க.ஸ்டாலின்: இது மக்களவைக்காக நடைபெற்ற தேர்தல், ஆட்சி மாற்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனால், இந்த இடைத்தேர்தலில் கூடுமான வரையில் 22 இடங்களில்  வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம் என்று கருதித்தான், அந்த உறுதிமொழியைக் கொடுத்தோம். ஆனால், வரவில்லை. நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதிகமான இடங்களில் வெற்றிபெற்றது நாங்கள்தான், அதையும் மறந்துவிடக் கூடாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com