‘கை’யறு நிலையில் காங்கிரஸ்!

அடுத்தடுத்த தோல்விகள்... "கை'களுக்கு அகப்படாமல் கானல் நீராக மாறிய ஆட்சி அதிகாரம்... அரசியல் அரங்கில் முன்வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் என முன்னெப்போதும் சந்தித்திராத பல சங்கடங்களை
‘கை’யறு நிலையில் காங்கிரஸ்!


அடுத்தடுத்த தோல்விகள்... "கை'களுக்கு அகப்படாமல் கானல் நீராக மாறிய ஆட்சி அதிகாரம்... அரசியல் அரங்கில் முன்வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் என முன்னெப்போதும் சந்தித்திராத பல சங்கடங்களை சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.

காங்கிரûஸ பொருத்தவரையில் சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் சரித்திரம் காணாத சறுக்கல்களையும் அக்கட்சி சந்தித்திருக்கிறது; சட்டென எழுந்து சாதனையும் படைத்திருக்கிறது. மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும்பட்சத்தில் தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸால் நிச்சயம் மீண்டு வந்துவிட முடியும் என்று அக்கட்சியினர் திடமாக நம்புகின்றனர்.

அந்த நம்பிக்கை ஒருபுறம் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கலாம். ஆனால், மறுபுறும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணித் தலைவர்களின் மனதில் இருந்து சரிந்திருக்கும் கட்சியின் மதிப்பை எப்படி மீட்டெடுப்பது? என்பதுதான் இப்போது காங்கிரஸ் நிர்வாகிகளின் பெருங்கவலையாக உள்ளது.
குறிப்பாக தமிழக காங்கிரஸாரிடம் அந்த வேதனை வெளிப்படையாகத் தெரிகிறது. தேர்தலுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் உறவில் விரிசல் என்றும், பனிப்போர் நடக்கிறது என்றும் செய்திகள் வெளியான போது இரு கட்சிகளுமே அதைத்  திட்டவட்டமாக மறுத்தன. ஆனால், திமுக தலைமை அண்மைக்காலமாக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதே வெளிச்சத்துக்கு வராத நிதர்சனம். 
கருணாநிதி இருந்தபோது தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் அவர் சாதுர்யமாக செயல்படுவார்.  மாநில காங்கிரஸில் முதல்நிலைத் தலைவர்களுக்கு உரிய மதிப்பை கருணாநிதி அளித்ததன் காரணமாகவே கடந்த காலங்களில் இரு கட்சிகளும் இணைந்து நான்கு மக்களவைத் தேர்தல்களையும், நான்கு சட்டப் பேரவைத் தேர்தலைகளையும் சந்திக்க முடிந்தது. 

ஆனால், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் தற்போது அத்தகைய சுமுக உறவு இல்லை. பல தருணங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் அவமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 10 இடங்களை காங்கிரஸூக்கு திமுக ஒதுக்கியது. தொகுதி உடன்பாட்டுக்குப் பிறகு  அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் சென்றனர்.

ஆனால், அவர்களில் குறிப்பிட்ட சிலரை சந்திக்க மட்டுமே திமுக தலைமை சம்மதம் தெரிவித்தது. அதேவேளையில், திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் 20 பேரை ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிகழ்வு காங்கிரஸாரை காயப்படுத்தும் வகையில் அமைந்தது. 

அந்த கசப்புணர்வு மறையும் முன்பே மற்றுமொரு நிகழ்வு அரங்கேறியது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வைகோ வேட்புமனுத் தாக்கல் செய்தபோது சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் உடன் சென்றிருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுள் ஒருவர் என்ற முறையில் வைகோவின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்து ராமசாமியும் கையொப்பமிட்டிருந்தார். ஆனால், வேட்புமனு தாக்கலின்போது ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட திமுக தலைவர்களே வைகோவுடன் முன்வரிசையில் இருந்தனர். முக்கியத்துவம் ஏதுமின்றி பின்வரிசையில் ஓர் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார் கே.ஆர்.ராமசாமி. 

கருணாநிதி இருந்திருந்தால் இப்படித்தான் கூட்டணித் தலைவர்களை, அதிலும் காங்கிரஸ் தலைவர்களை நடத்துவாரா? என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. மாநிலத்தில் கட்சியின் மரியாதையைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.அழகிரி, திமுகவை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

திமுகவை விமர்சித்து பேசிய "கராத்தே' தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததற்கும்கூட அதுவே காரணம் என்றும் தெரிகிறது. அதன் உச்சமாக, அண்மையில் "கராத்தே' தியாகராஜன், காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் இருந்தே போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. காங்கிரûஸ உதாசீனப்படுத்தும் திமுகவை இந்த அளவு திருப்திப்படுத்த அழகிரி முயற்சிப்பது ஏன் எனத் தெரியவில்லை என்பது "கராத்தே' தியாகராஜன் எழுப்பும் கேள்வி. 

கருணாநிதியின் சிலை திறப்புக்காக அண்மையில் சோனியாவும், ராகுலும் சென்னை வந்திருந்தனர். கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அவர்கள், அப்போது அண்ணாவின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 50 ஆண்டு கால அரசியல் களத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் எவரது நினைவிடத்துக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சென்றதாக வரலாறு இல்லை. 

அதே நேரத்தில் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தைக் கடந்துதான் சோனியா, ராகுலின் வாகனம் அன்றைக்கு அண்ணா நினைவிடத்தை நோக்கிச் சென்றது. அப்போது காமராஜருக்கு மரியாதை செலுத்தி விட்டுச் செல்லலாம் என்று அவர்களை மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூட வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. 

தேர்தல் ஆதாயத்துக்காக தோழமைக் கட்சிகளிடம் சில விஷயங்களை விட்டுக் கொடுப்பது என்பது இயல்புதான். அதற்காக, சுயமரியாதையை விட்டுக் கொடுப்பது எந்த வகையிலான அரசியல் சாணக்கியத்தனம் என்று பொறுமுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். 

இதே நிலைமை தொடர்ந்தால், காங்கிரஸ், திமுகவால் ஒரேடியாக ஓரங்கட்டப்படும் என்பது "கராத்தே' தியாகராஜன், வாலாஜா அசேன் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களின் ஆதங்கம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்களைவிட அதிகமான இடங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டே வெற்றிபெற முடியும் எனும்போது, எதற்காக திமுகவுடன் கூட்டணியில் தொடர வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

காங்கிரஸார் மத்தியில் நிலவும் அதிருப்தியைப் புரிந்துகொண்டு கணிசமான இடங்களை அந்தக் கட்சிக்கு ஒதுக்கிக் கொடுத்துத் தனது கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ளுமா, இல்லை காங்கிரûஸத் தனித்துப் போட்டியிட திமுக விட்டுவிடுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

திமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது, அதை "ஒட்டு காங்கிரஸ்' என்று கேலி செய்தார் திமுக தலைவரும், அப்போதைய முதல்வருமான கருணாநிதி. இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ "ஒட்டு திமுக' என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் தமிழகத்தில் நிலவும் யதார்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com