தமிழகத்தில் அதிகரித்து வரும் விபத்துகள்: ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கியக் காரணம்

தமிழகத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதே 47 சதவீத சாலை விபத்துகளுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் விபத்துகள்: ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கியக் காரணம்


சென்னை: தமிழகத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதே 47 சதவீத சாலை விபத்துகளுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் எண்ணிக்கை 12 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் ஏப்ரல் மாதம் வரை உள்ள கணக்கெடுப்பின்படி, மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 61,847 வாகனங்கள் உள்ளன. இதில்,  2,15,86,210 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 63,920 சாலை விபத்துகளில் 12,216 பேர் இறந்துள்ளனர், 74,537 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துகளினால் ஒரு நாளைக்கு சராசரியாக 33 பேர் இறந்துள்ளனர், 204 பேர் காயமடைந்துள்ளனர். பத்தாண்டுகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலத்தில் அதிகப்படியான சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதன் பின்னர், சாலை விபத்துகளைத் தடுக்க அரசு எடுத்த தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, சாலை விபத்துகள் கடந்த இரு ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகின்றன. இருப்பினும், அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள்ளே நீடிக்கிறது. மாநிலத்தில் சென்னை, திண்டுக்கல், பெரம்பலூர்,விழுப்புரம்,திருப்பூர், தருமபுரி, காஞ்சிபுரம், கடலூர், மதுரை,கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களிலே அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன.

47 சதவீத விபத்துகள்: சாலை விபத்துகள் பெரிய அளவில் குறையாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவாகவும், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் 62,249 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 11,720 பேர் இறந்துள்ளனர், 66,962 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் 93 சதவீதம் வாகன ஓட்டுநர்களில் தவறுகளால் ஏற்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. இதில், உயிரிழப்பு ஏற்படும் சாலை விபத்துகளில் 73.7 சதவீதம் வாகன ஓட்டுநர்களின் தவறுகளால் ஏற்படுவதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

ஓட்டுநர்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதினால் 47.9 சதவீதமும், அலட்சியம், முந்திச் செல்லுதல் போன்றவற்றால் 41 சதவீதமும், மது போதையின் காரணமாக 2.6 சதவீதமும் விபத்துகள் நேரிடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவிக்கிறது.

அதிவேகமாக சென்றதாக 9,625 வழக்குகள்: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்துகள், லாரிகள், சரக்கு வாகனங்கள், வேன், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும், கார் மற்றும் சொகுசு வாகனங்களை அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் இயக்கலாம் என போக்குவரத்துத் துறை கூறுகிறது. ஆனால் இந்த விதிமுறையை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றுவதில்லை. லாரி, வேன்கள், சரக்கு வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதினாலேயே நெடுஞ்சாலைகளில் 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விபத்துகள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

 சாலை விபத்துகளில் பெரும்பாலானவை வாகன ஓட்டுநர்களின் தவறுகளால் ஏற்படுவதாக கூறிக் கொண்டாலும், விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநர்கள் உரிமம் சொற்ப அளவிலேயே ரத்து செய்யப்படுகின்றன. உதாரணமாக, கடந்தாண்டு வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் 10,882 விபத்துகள் ஏற்பட்டுள்ளன, 

அதில் 11,720 பேர் இறந்துள்ளனர். ஆனால் விபத்துக்கு காரணமான 1,066 ஓட்டுநர்களின் உரிமங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக போக்குவரத்துறை சார்பில் கடந்த ஆண்டு 9,625 வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: சாலை விபத்துகளைக் குறைக்க இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனெனில், சாலை விதிமுறைகள் குறித்தும், மோட்டார் வாகனச் சட்டம் குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் பெரும்பாலான ஓட்டுநர்களிடம் குறைவான புரிதலே உள்ளது. இதனால் இவர்கள் ஒரு முறை தவறு செய்தால் கூட, அடுத்து திருந்துவதற்கான வாய்ப்பு இல்லாமலேயே சென்றுவிடுகிறது.

இதனால், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் விபத்துக்களை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தால் மட்டுமே, அவர்களுக்கு சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்கின்றனர். அதேவேளையில் மற்றொரு தரப்பினர், எத்தகைய கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் அதற்குப் பலனில்லை. எனவே ஓட்டுநர்களிடமும், பொதுமக்களிடமும் சாலை விதிமுறைகள் குறித்தும், மோட்டார் வாகனச் சட்டம் குறித்தும் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே சாலை விபத்துகளின் ஆபத்தில் இருந்து அனைவரையும் மீட்டெடுக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.

வாகனங்களும், சாலைகளும்: சாலைகளில் 100 கிலோ மீட்டர், 80 கிலோ மீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும் என்று அரசும், சட்டமும் கூறிக் கொண்டிருக்கும்போதே, வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் 300 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை அதிகமாக தயாரித்து, விற்கின்றன. அதேபோல கார் நிறுவனங்கள், சில நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டுவிடலாம் என   தங்களது கார்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன.அண்மைக் காலமாக புதிதாக அறிமுகமாகும் கார், மோட்டார் சைக்கிள்களுக்கும், நமது சாலைகளுக்கும் இடையே வேக அளவில் பெரிய இடைவெளி உள்ளது. 

இதை அரசு ஒழுங்குப்படுத்தாத பட்சத்தில், அதிவேகத்தினால் ஏற்படும் சாலை விபத்துகளை முற்றிலும் தடுப்பது சாத்தியம் கிடையாது என தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். 

பத்தாண்டு விபத்துகளும் இறப்புகளும்....

ஆண்டு    விபத்துக்கள்    இறப்புகள்    காயமடைந்தோர்

2018    63,920    12,216    74,537
2017    65,562    16,157    74,572
2016    71,431    17,218    79,852
2015    6,7250    15,642    79,701
2014    67,250    15,190    77,725          
2013    66,238    15,563    75,681
2012    67,757    16,175    78,348 
2011    65,873    15,422    74,245
2010     64,996    15,409    75,445  
2009    60,794    13,746    70,504


கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட  சாலை விபத்துக்கு காரணமான வாகனங்கள்

வாகனங்கள்    விபத்துகள்    இறந்தவர்கள்    காயமடைந்தோர்
அரசுப் பேருந்து    2,449    818    3,067
தனியார் பேருந்து    2,773    653    4,525
லாரி உள்ளிட்ட
கனரக வாகனங்கள்    6,760     1,938    7,265
கார் உள்ளிட்ட இலகு
ரக வாகனங்கள்    17,478    3,068    22,603     
இரு சக்கர
வாகனங்கள்    26,470    3,965    28,354 
மூன்று சக்கர
வாகனங்கள்    2,797    274    3,801
பிற வாகனங்கள்    5,193     1,500    4,922
மொத்தம்    63,920    12,216    74,537
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com