ரேஷனில் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு!: கிராம மக்கள் வேதனை

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு திடீரென பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரேஷனில் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு!: கிராம மக்கள் வேதனை


விழுப்புரம்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு திடீரென பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கே வழியில்லாத நிலை உள்ளதாக கிராமப்புற குடும்ப அட்டைதாரர்கள் வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி  நபருக்கு 5 கிலோ முதல் அதிகபட்சம் 20 கிலோவும், சர்க்கரை நபருக்கு அரை கிலோ முதல் அதிகபட்சம் 2 கிலோவும்,  மண்ணெண்ணெய் 3 லிட்டர்,  துவரம் பருப்பு ஒரு கிலோ, கோதுமை 5 கிலோ, பாமாயில் ஒரு லிட்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் மானியம் காரணமாக இந்த பொருள்கள் மலிவு விலையில் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் புழக்கம் காரணமாக, அத்தியாவசியப் பொருள்கள் உரிய ஏழை மக்களுக்கு முழுவதுமாகச் சென்றடைவதில்லை என்ற புகார் எழுந்தது. இதனைத் தடுக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப அட்டைகள் முறைப்படுத்தப்பட்டன. இதில், 20 லட்சம் போலி குடும்ப அட்டைகள் வரை அகற்றப்பட்டன.

பழைய குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக,  "ஸ்மார்ட்' அட்டைகள் வழங்கப்பட்டன. இந்தக் கணக்கீட்டின் படி, தமிழகத்தில் உள்ள 1.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய ஒதுக்கீடுகள் பெறப்பட்டு அத்தியாவசியப் பொருள்கள் மாதம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு: புதிய குடும்ப அட்டைகளின் கணக்கீட்டின் படி, அரிசி 80 சதவீதமும் சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்றவை 60 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதனால், இந்தப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு முழுமையாக வழங்குவதில் பிரச்னைகள் தொடர்ந்து வந்தன.

இதனை சமாளிக்கும் வகையில், அரிசி மட்டும் முழு அளவிலும், சர்க்கரை 2 கிலோவும், கோதுமை 3 கிலோவும், மண்ணெண்ணெய் 2 லிட்டரும் என பகிர்ந்து குறைந்தளவிலும் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், மண்ணெண்ணெயின் அதிலும் பாதி அளவாக குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.  2,100 நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத அரிசி மட்டும் முழு அளவில் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைவு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஒன்றரை லிட்டர் தான் வழங்கப்படுகிறது.  இதுவும், வழங்கும் தினத்தில் முந்திக் கொள்பவர்களுக்குத் தான் கிடைக்கும் நிலை உள்ளது. 

இதற்காக மக்கள் போராடி பழகிப் போன நிலையில்,  தற்போது அந்த மண்ணெண்ணெயும் கிடைக்காத நிலை உள்ளதால், கிராமப்புறங்களில் சமையலுக்கும், விளக்குக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து நியாய விலைக் கடைக்காரர்கள் கூறியதாவது: நியாய விலைக் கடைகளுக்கு 60 சதவீதம் அளவுக்கு ஒதுக்கீடு செய்து வந்த மண்ணெண்ணெய், தற்போது 40 சதவீதமாகக் குறைந்து விட்டது. குறிப்பாக, 350 குடும்ப அட்டைகள் உள்ள கடைக்கு 900 லிட்டர் ஒதுக்கி வழங்கி வந்த நிலையில், தற்போது 400 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஏற்கெனவே ஒரு குடும்பத்துக்கு 1.5 லிட்டர் வழங்கி வந்த நிலையில், தற்போது ஒரு லிட்டர் வழங்குவதே கடினமாகியுள்ளது. அரிசி, பாமாயில் ஒதுக்கீடும் குறைந்துள்ளது. இதனால் வருவதை பகிர்ந்து விநியோகிக்கிறோம். ஆனால், நாங்கள் தவறு செய்வதாகக் கருதி மக்கள் தகராறு செய்கின்றனர். ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்ட பிறகு விற்பனையில் பிரச்னை இல்லை. ஆனால், ஒதுக்கீடு பாதியாகக் குறைந்துள்ளதால், பொது விநியோகத் திட்டப் பொருள்களை வழங்க முடியாமல் தவிக்கிறோம் என்றனர்.

மானிய ஒதுக்கீட்டை குறைத்தது மத்திய அரசு: இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:  நாடு முழுவதும் மத்திய அரசின் மானிய ஒதுக்கீடு அளவு குறைந்து வருகிறது. இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தை நாடியதால், அந்த மாநிலத்தில் மட்டும் ஒதுக்கீடு அளவு குறையவில்லை.

தமிழகத்துக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவு  ஏற்கெனவே 60 சதவீதமாகக் குறைந்தது.  இந்த மாதம் மேலும் குறைந்துள்ளது.  மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளதால், அதற்கான மானியத்தையும் மத்திய அரசு குறைத்து வருகிறது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவு தொடர்பாக,  தமிழக அரசு குழுவைக் கூட்டி ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், வரும் பொருள்களை மக்களுக்குப் பகிர்ந்து வழங்கி சமாளிக்கும்படி,  மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com