இதுதான் ஈ வெ ரா கற்று தந்த பகுத்தறிவா?: திராவிட ‘அடைமொழி’ இயக்கங்களுக்கு பாஜக கேள்வி 

கல்வி நிலையங்களில் புகுந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது தான் ஈ வெ ரா கற்று தந்த பகுத்தறிவா என்பதை 'திராவிட' அடைமொழி கொண்ட இயக்கங்கள் விளக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுள்ளது.
இதுதான் ஈ வெ ரா கற்று தந்த பகுத்தறிவா?: திராவிட ‘அடைமொழி’ இயக்கங்களுக்கு பாஜக கேள்வி 

சென்னை: கல்வி நிலையங்களில் புகுந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது தான் ஈ வெ ரா கற்று தந்த பகுத்தறிவா என்பதை 'திராவிட' அடைமொழி கொண்ட இயக்கங்கள் விளக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை ஐ ஐ டி வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ரவுடிகளின் அட்டகாசம். நேற்று 22.07.2019 அன்று அந்த பள்ளியில் புதிய கல்வி கொள்கை குறித்த  சில கல்வியாளர்கள்,கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்ட  கூட்டம் நடை பெற்றது.  இது முறைப்படி ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்கான கூட்டம் இது. இதில் யாரை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டியது நிர்வாகம் தான்.

இந்நிலையில், கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சில சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து தங்களின் கருத்துக்களையும் கேட்கவேண்டும் என்று அங்கிருந்த ஆசிரியர்களை, அதிகாரிகளை மிரட்டியுள்ளது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கும்பல்  'தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்' என்று தங்களை  அடையாளப்படுத்தி கொண்டதாக தெரிகிறது. ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளில் தலையிடுவது சட்டவிரோதம் என்பதை அவர்கள் உணர வேண்டும். தொடர்ந்து கல்வி நிலையங்களில் புகுந்து இது போன்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது தான் ஈ வெ ரா கற்று தந்த பகுத்தறிவா என்பதை 'திராவிட அடைமொழி கொண்ட இயக்கங்கள் விளக்க வேண்டும்.

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமெனில் தங்களின் இயக்கங்கள் மூலமாக தாங்கள் விரும்பும் நபர்களை அழைத்து கருத்துக்களை, ஆலோசனைகளை பெற்று, தொடர்புடைய இணையதளத்திலோ, அமைச்சகத்திலோ தெரிவிக்கலாம். அதை விடுத்து  கல்வி நிறுவனத்தில் புகுந்து கூட்டத்தை நிறுத்துமாறு அச்சுறுத்துவது வன்முறையின் உச்சக்கட்டம்.

தமிழக காவல்துறை இனியும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க கேந்திர வித்யாலயா மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். நேற்று அந்த பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com