சேலத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே அரசு சட்டக் கல்லூரி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

சேலத்தில் நடப்புக் கல்வியாண்டில் புதியதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு,  மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


சேலத்தில் நடப்புக் கல்வியாண்டில் புதியதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு,  மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
 தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் மாநில அளவிலான வங்கிக் கடனுதவி வழங்கும் விழா ஓமலூர் அருகேயுள்ள கருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் 31,406 பயனாளிகளுக்கு ரூ.112 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளையும்,  பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.4 லட்சத்தையும் வழங்கி, முதல்வர் பழனிசாமி மேலும் பேசியது:
உலக மயமாக்கலுக்குப் பின்னர் வங்கிகள் இணைப்பு நடைபெறுகிறது. மத்திய அரசின் முயற்சியால் இந்தியா முழுவதும் 196 ஊரக வங்கிகள் 45 வங்கிகளாக இணைக்கப்பட்டுள்ளன. சிறு,குறு வங்கிகள் சேர்ந்து பெரிய வங்கியாக உருவானதால் மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,  தனியார் வங்கிகளுக்கு இணையாக மாறியுள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியானது ரூ. 23 ஆயிரம் கோடியில் ஆண்டு வர்த்தகம் நடைபெற்று,  தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. மற்ற வங்கிகளில் வாராக் கடன் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியில் வாராக் கடன் 1.79 சதவீதமே உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 13.52 லட்சம் பேருக்கு ரூ.9,210 கோடி தமிழ்நாடு கிராம வங்கியானது கடன் வழங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், பெண்கள் கந்து வட்டிக் கொடுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
அம்மாபாளையத்தில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்: தமிழ்நாடு கிராம வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஜாகிர் அம்மாபாளையம் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கும்.  
சேலம் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 87,350 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,378.88 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் ரூ.624 வங்கிக் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இலக்கையும் தாண்டி ரூ.646.80 கோடி 14,743 குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.  இதன்வாயிலாக, பெண்கள் சொந்தக் காலில் நிற்க அரசு வழிவகை செய்கிறது.
பால் உற்பத்தியில் சேலம் மாவட்டம் முதலிடம்: தமிழக அளவில் பால் உற்பத்தியில் சேலம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கால்நடைகளை வாங்க ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.  
இதனால், கறவை மாடுகளை வாங்கிக் கொள்ளலாம். பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஒன்றியங்கள் நிறுவப்பட்டுள்ளன.இதன் மூலம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அதிக கால்நடைகளை வளர்த்து பால் உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமல்லாமல்,  சுயமாக தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
10 மாவட்டங்களில் காய்கறி விற்பனை மையங்கள்:  மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 100  ஏரிகளில் நிரப்பும் திட்டம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மலர் சாகுபடி விவசாயிகள் தங்களது பூக்களை பெங்களூரு சென்று விற்பனை செய்கின்றனர்.  இந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓசூரில் உலகத் தரத்தில் சர்வதேச மலர் ஏல மையம் ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இதேபோன்று தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். சென்னைக்கு அருகில் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 ஆயிரம் கோடி உணவுப் பூங்கா அமைக்கப்படும். சேலம் மாவட்டத்துக்குள்பட்ட தலைவாசல் கூட்டு ரோடு பகுதியில் 900 ஏக்கரில் ரூ.1,000 கோடியில் ஆசிய அளவில் மிகப் பெரிய பிரம்மாண்ட கால்நடைப் பூங்கா அமைய உள்ளது. விவசாயிகளின் கால்நடை வளர்ப்புக்கு உதவிடும் வகையில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்திடும் வகையில், இங்கு கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பத்மஜா சுந்துரு தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் டி.தனராஜ் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், இந்தியன் வங்கி பொதுமேலாளர் எம்.நாகராஜன்,  தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளிருக்கு கடனுதவி வழங்க வங்கிகள் முக்கியத்துவம்
முதல்வருக்குக் கூட பிணையின்றி கடன் கொடுக்க வங்கிகள் யோசிக்கும் நிலையில்,  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எந்தவிதமான பிணையும் இன்றி ரூ.20 லட்சம் வரை வங்கிகள் கடன் வழங்கி வருகிறது. வீடு கட்ட வங்கியை அணுகி கடன் கேட்டபோது, உரிய பிணையை பெற்ற பின்னரே கடன் எனக்கு கிடைத்தது. மகளிர் சுய உதவிக்குழுவினர் 99 சதவீதம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி  வருகின்றனர்.  இதேபோல் மற்றவர்களும்  நடந்து கொண்டால் வங்கிக் கடன் கிடைக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com