ஸ்காட்லாந்து கல்வி நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. முடிவு

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதென ஸ்காட்லாந்தில்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்காட்லாந்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (எடின்பரோ) தலைமை நிர்வாகிகளுடன்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்காட்லாந்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (எடின்பரோ) தலைமை நிர்வாகிகளுடன்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.


முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதென ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (எடின்பரோ) கல்வி நிறுவனமும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.
இதன் மூலம் தமிழக மருத்துவ மாணவர்களும், ராயல் காலேஜ் மாணவர்களும் பரஸ்பரம் பலனடைய உள்ளனர். அதுமட்டுமன்றி தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வியின் தரத்தை அடுத்தகட்டத்துக்கு மேம்படுத்த இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
முன்னதாக, இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் சென்னைக்கு வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உள்ள மருத்துவ தொழில்நுட்பங்கள், சமகால சிகிச்சை முறைகள், மருத்துவப் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை அவர்கள் கேட்டறிந்தனர். ராயல் காலேஜின் தலைவர் எஸ்.எம்.கிரிஃபின், துணைத் தலைவர் பாலா ராஜேஷ், கவுன்சில் உறுப்பினர்கள் சாய் கிருஷ்ணா விட்டல், இயான் ஹாத்தோர்ன் உள்ளிட்டோர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதன் முடிவில் பல்வேறு கல்வி சார் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவற்கு இரு தரப்பினரும் இசைவு தெரிவித்தனர். இதன் மூலம், வரும் காலங்களில் தமிழக மாணவர்களும், ராயல் காலேஜ் மாணவர்களும் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் சென்று பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். அதேபோன்று, இணையவழி கருத்தரங்குகளில் இரு தரப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.
இதுகுறித்து, மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:  மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து செயல்படுவதற்காக ஸ்காட்லாந்து ராயல் காலேஜின் தலைமை நிர்வாகிகள் அனைவரும் ஒருசேர இந்தியாவுக்கு வருகை புரிந்து ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
அந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் அவர்கள் நடத்திய ஆலோசனையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அவை இரு தரப்பு மாணவர்களுக்கும் ஆக்கப்பூர்வமான பலனை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குறிப்பாக, தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் கல்வி நிறுவனத்துக்குச் சென்று பணியாற்றுவதற்கும், பயிற்சி மேற்கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுமட்டுமன்றி தமிழகத்தில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்பவர்கள் சர்வதேச தரத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர்களாக உருவெடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் வழிவகுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com