
மின்சாரப் பேருந்துகளில் பயணிக்கும் அனுபவத்தை சென்னைவாசிகள் பெறும் வகையில், இரண்டு மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களை மறுகட்டமைப்பு மூலமாக நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, வரும் ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும், 12 ஆயிரம் பி.எஸ். 4 ரக பேருந்துகளும் படிப்படியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக 100 மின்சாரப் பேருந்துகள் வாங்க, கேஎப்டபிள்யூ ஜெர்மனி நிதியுதவி அளிக்கவுள்ளது.
இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன.
மேலும், பசுமை காலநிலை நிதித்திட்டத்தின் கீழ் மேலும் 250 மின்சாரப் பேருந்துகளை நபார்டு நிதியுதவி மூலம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மின்சாரப் பேருந்துகள்: இதனிடையே, மின்சாரப் பேருந்துகளின் பயண அனுபவத்தை பொதுமக்களிடையே அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இரண்டு மின்சாரப் பேருந்துகள் சென்னைப் பகுதியில் இயக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் இரண்டு மின்சாரப் பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் கட்டணம் இல்லாமல் இயக்கப்படுமா அல்லது குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுமா என்பன போன்ற விவரங்கள் பின்னர் தெரிய வரும்.
இந்த இரண்டு பேருந்துகளின் சேவையைத் தொடர்ந்து, விரைவில் முழுமையான அளவில் மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தமிழக அரசு தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.