
பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதில், எஸ்.டிக்கான கட் ஆஃப் 53.75, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 28.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில்,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் "ஜூனியர் அசோசியேட்" பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற நூறு மதிப்பெண்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் 61.25, பட்டியலினத்தவர் 61.25, பழங்குடியினத்தவர் 53.75 என "கட் ஆப்" மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோர் 28.5 "கட் ஆப்" மதிப்பெண்கள் மட்டும் இருந்தாலே தேர்ச்சி என்பது சமூக நீதியை மத்திய பா.ஜ.க. அரசு எப்படி படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சமூக நீதி கட்டமைப்பை தகர்த்து, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும், பட்டியலின, மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கும் வேலை வாய்ப்பை மேலும் பாழாக்கும் இந்த பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.