தகவல்கள் வெளிவருவதை மோடி அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம் 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் காரணமாக தகவல்கள் வெளிவருவதை மோடி அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தகவல்கள் வெளிவருவதை மோடி அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம் 

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் காரணமாக தகவல்கள் வெளிவருவதை மோடி அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 இல்  அமைந்தவுடன் எடுத்த மிகமிகப் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஒளிவு மறைவை ஒழித்து வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டது. மத்திய - மாநில அரசுகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு துறைகளில் நடக்கிற எந்த நடவடிக்கைகளையும் சாதாரண குடிமக்கள் உரிய முறையில் விண்ணப்பித்து மிகக் குறைந்த கட்;டணத்தை செலுத்தி 30 நாட்களுக்குள் தகவல் பெறுகிற உரிமையை அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது. இதுவரை இச்சட்டத்தை 70 லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

நரேந்திர மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்த போது அதனால் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதா ? எவ்வளவு பணம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்தது என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட போது அதற்குரிய பதிலை மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுகுறித்து விளக்கம் கேட்ட போது மத்திய ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த தொகையில் 99 சதவீதம் திரும்ப வந்து விட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வெளிவந்தது.

மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்ததில் 93 சதவீதம் பா.ஜ.க.விற்கு வழங்கப்பட்டது என்கிற தகவலும் இச்சட்டத்தின் மூலம் வெளிவந்ததுள்ளது. இந்த வகைகளில் தகவல்கள் வெளிவருவதை நரேந்திர மோடி அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கடந்த 2018 இல் நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்துகிற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க.வுக்கு உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27 இல் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை எதிர்த்து அன்னை சோனியா காந்தி கடுமையாக மக்களவையில் உரையாற்றியிருக்கிறார்.

முதன்மை தகவல் ஆணையர்களாகவும், தகவல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படப் போகிறவர்களின் பதவிக் காலம், ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசே நிர்ணயிக்க இச்சட்டம் வழிவகுத்திருப்பதால் இனி தாங்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் எப்படி செயல்பட வேண்டும், ஆளும் ஆட்சியாளர்களுக்கு கோபம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும், என்பதெல்லாம் நியமிக்கப்படுபவர்களுக்கு இச்சட்டத் திருத்தம் உணர்த்துகிறது. அதேபோல, மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றையும் மத்திய அரசே நிர்ணயிக்கும் இத்திருத்தம் கூறுவதன் மூலம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கூட்டாட்சித் தத்துவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. அரசு தனது எதிர்ப்பை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

எனவே, இந்தியாவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்கிற வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இத்திருத்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com