Enable Javscript for better performance
அமெரிக்கன் படைப்புழுக்களால் பயிர்கள் பாதிப்பு: 17 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 186 கோடி நிவாரணம்: தமிழக- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்கன் படைப்புழுக்களால் பயிர்கள் பாதிப்பு: 17 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 186 கோடி நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பயிரிட்ட 17 மாவட்ட விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு ரூ.186.25 கோடி அளவிலான நிவாரண நிதியை விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் கடந்த சில மாதங்களாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் 17 மாவட்டங்களில் புழுவின் தாக்குதலால் மக்காச்சோளப் பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.
    எந்தெந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் தூத்துக்குடி, சேலம், விருதுநகர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, கடலூர், திருப்பூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச் சோளப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 77 ஆயிரத்து 825 விவசாயிகளும், சேலத்தில் 47 ஆயிரத்து 441  விவசாயிகளும், தூத்துக்குடியில் 40 ஆயிரத்து 373 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரண நிதி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
    இந்த அறிவிப்பின்படி,  குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.33.08 கோடியும், பெரம்பலூரில் ரூ.32.18 கோடியும் நிவாரண நிதி அளிக்கப்பட உள்ளன. பிற மாவட்டங்களில் பாதிப்புக்கு ஏற்ப நிதி அளிக்கப்படும். இந்த நிதிக்கான உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா அண்மையில் பிறப்பித்தார்.
    இந்த நிவாரண நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ரூ.186 கோடிக்கு நிவாரண நிதி வழங்கப்பட இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai