Enable Javscript for better performance
ஆதாரங்களை தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆதாரங்களை தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PONMANIKKAVEL


    சிலை கடத்தல் வழக்குகளில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்தால், அதுதொடர்பான ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
    சென்னை உயர்நீதிமன்றத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் காதர் பாட்சா தாக்கல் செய்த மனுவில், என் மீது பழிவாங்கும் நோக்கில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்காகவே என் மீது இந்தப் பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். 
    அந்த வழக்கில் இருந்து நான் ஜாமீன் பெற்றேன். ஆனால், மற்றொரு பொய் வழக்கில் என்னை கைது செய்து, சிறையில் அடைத்தார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தையும் பொன் மாணிக்கவேல் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார். 
    எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, சிபிசிஐடி பிரிவு டிஜிபி ஆகியோருக்கு புகார் மனு அளித்தேன். ஆனால் அந்த மனுவின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் செல்வராஜ், சிலை கடத்தல் தொடர்பான இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதனையடுத்து தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சிலை கடத்தல் சம்பவங்களில் தமிழக அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கில் அவரையும் ஒரு மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என வாதிட்டார். 
    இதையடுத்து, பொன் மாணிக்கவேலை மனுதாரராக ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்தால், அதுதொடர்பான ஆதாரங்களை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai